மும்பை: நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை துல்லியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும் என மஹாராஷ்டிரா மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் துக்காராம் முண்டே கூறியுள்ளார்.
முன்னுரிமை
மும்பையில் நடந்த மாநாடு ஒன்றில் அவர் பேசியதாவது: பொது மக்கள், தங்களது உடை மற்றும் தோற்றத்திற்கு நிறைய கவனம் செலுத்துகின்றனர். ஆனால் அந்த முக்கியத்துவத்தை உணவுக்கு அளிப்பதில்லை. எந்த மாதிரியான புரோட்டீன், கார்போ ஹைட்ரேட்களை நாம் எடுத்துக் கொள்கிறோம் என்பதாவது நமக்கு தெரியுமா? தாங்கள் சாப்பிடுவது உண்மையில், தங்கள் உடலுக்கும், மனதுக்கும் தேவையானது தானா என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். உணவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தனது முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்கிறது.
கவனம்
நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள்? எப்படி சாப்பிடுகிறீர்கள்?, எவ்வளவு சாப்பிடுகிறீர்கள்? எப்போது சாப்பிடுகிறீர்கள்? என்பதை பொறுத்தே ஒரு மனிதர் உருவாகிறார். தோற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துவதைவிட இந்த காரணிகள் மிகவும் முக்கியமானவை. ஒருவரின் தோற்றம் அவர் உட்கொள்ளும் உணவுகளாலும் பாதிக்கப்படுகிறது. சரியான புரோட்டீன், கலோரிகள், அடங்கிய சரிவிகிதமான உணவுகளை உட்கொள்வது முக்கியம். வறுத்த உணவு, அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் நிறைந்த உணவுகள் தவிர்க்கப்பட வேண்டியவை. உயர் வாழ்வதற்கு உணவு போன்ற ஒரு அடிப்படைத் தேவைக்கு மக்கள் ஏன் போதுமான கவனம் செலுத்துவதில்லை.
பாரபட்சமா
சிறிய உணவகங்கள், ஐந்து நட்சத்திர நிறுவனங்களில் நடக்கும் ஆய்வுகள் அனைத்தும் ஒரே மாதிரியாக தான் உள்ளது. அனைத்து நிறுவனங்களுக்கும் வழக்கமான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள், அனைத்தும் ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. தெருவோர உணவகங்களுக்கும், ஐந்து நட்சத்திர நிறுவனங்கள் என உணவு பாதுகாப்புத்துறை பாரபட்சம் பார்ப்பது இல்லை. வட பாவ் கடைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். மு்மபையில் உளள சில முக்கியமான கிளப்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அமைவிடம் அல்லது நிறுவனத்தின் நற்பெயர் என்பதை வைத்து தீர்மானிக்க மாட்டோம். அது விதிமுறைகளுக்கு இணங்குகிறதா என்பதே ஒரே அளவுகோள்.
பிரச்னைகள்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட கிளப் ஒன்றில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். இருப்பினும், ஒரு நிறுவனத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் இருப்பதோ முக்கியமானது இல்லை. பரிமாறப்படும் உணவு தேவையான தரத்தை பூர்த்தி செய்யவில்லை என்றால் அவை பரிமாறவோ வழங்கவோ அந்த நிறுவனத்திற்கு உரிமை இல்லை. நான் வெளியே சென்று சாப்பிடுவதை நிறுத்தி விட்டேன். அங்கு சென்றால் நிறைய பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளன. எனது குடும்பத்தினரும் அடிக்கடி வெளியே செல்வதில்லை. எங்கு செல்ல வேண்டும். எங்கு செல்லக்கூடாது என்பதில் இப்போது அதிக கவனம் செலுத்துகிறோம்.
இவ்வாறு துக்காராம் முண்டே கூறினார்.
