புதுடில்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து குறை கூறிய எதிர்க்கட்சிகள் மற்றும் நிதித்துறை முன்னாள் செயலர் சுபாஷ் கார்க் ஆகியோரை கடுமையாக சாடி உள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், அமைச்சர்கள் தரவுகளை உருவாக்குவதில்லை. எதிர்க்கட்சிகள் மீண்டும் தோல்வி அடைவார்கள் என பதிலடி கொடுத்து உள்ளார்.
2026- 27 ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் 7.8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது என்று மத்திய அரசு நேற்று அறிவித்தது. இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. முன்னாள் நிதித்துறை செயலாளர் சுபாஷ் கார்க்கும் குறை கூறியிருந்தார்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: அரசியல்வாதிகளாகிய நாங்கள் அமைச்சர்கள், எம்பிக்கள் இந்த புள்ளி விவரங்களை உருவாக்குவதில்லை. இதுபோன்ற எதிர்மறையான மனநிலையுடன் நீங்கள் முன்வரும் போது ஒரு வகையில் உங்களையே சிறுமைப்படுத்திக் கொள்கிறீர்கள்.
எதிர்மறையாக பேசுபவர்கள், என்ன வேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால், 7.8 சதவீத வளர்ச்சி என்பது ஒரு யதார்த்தம். டிவியில் சில எதிர்க்கட்சி தலைவர்களை பார்க்கும்போது, அவர்களுடன் ஒரு முன்னாள் நிதிச் செயலாளர் அல்லது முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னரை சேர்த்துக் கொள்ளலாம்.
ஒப்பிடுவதற்கு ஏற்ற சரியான விஷயங்களை எப்படி ஒப்பிடுவது என்று கூட அவர்களுக்குத் தெரியவில்லை. அடிப்படை ஆண்டே மாறி உள்ள நிலையில் பழைய வளர்ச்சி விகிதத்தை ஒரு புதிய முறையில் ஒப்பிட்டு, அவர்கள் இந்திய மக்களைத் தவறாக வழிநடத்த முயற்சிக்கிறார்கள்.
இந்தியாவை செத்துப்போன பொருளாதாரம் என்று பார்க்க விரும்பும் ஒரு சில எதிர்க்கட்சித் தலைவர்கள், அவர்கள் மீண்டும் மீண்டும் தோல்வியடைவததைப் போலவே மீண்டும் ஒரு முறை தோல்வியடைவார்கள். பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா தொடர்ந்து வேகமாக வளர்ச்சி அடையும். இவ்வாறு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
