சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூர் பகுதியில், தமிழக அமைச்சர் ஜெகதீஸ்வரியின் சொந்த கார் மோதிய விபத்தில் 26 வயது இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலை தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமைச்சர் ஜெகதீஸ்வரி காரில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது அமைச்சர் அரசு வாகனத்தில் முன்னால் செல்ல, அவருக்குப் பின்னால் பாதுகாப்பு எஸ்கார்ட் வாகனமும், அதற்குப் பின்னால் அமைச்சரின் சொந்த வாகனமும் அணிவகுத்து வந்துள்ளன. வாகனங்கள் காட்டாங்குளத்தூர் சந்திப்புப் பகுதியை கடந்தபோது, அமைச்சருக்குப் பின்னால் வந்த அவரது சொந்த வாகனமான மாருதி எர்டிகா (Maruti Ertiga) கார், எதிர்பாராதவிதமாக ஹோண்டா டியோ (Honda Dio) இருசக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இந்த கோர விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த இறையன்பு என்ற 26 வயது இளைஞர் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த மறைமலைநகர் போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீசார், விபத்தை ஏற்படுத்திய அமைச்சரின் சொந்த காரைப் பறிமுதல் செய்தனர். மேலும், உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், விபத்து தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
