சென்னை: மீண்டும் ஒரு இடைத்தேர்தலுக்கு தயாராகி வருகிறது தமிழகம் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு பிறகு நடக்கும் முதல் இடைத்தேர்தல் இது என்பது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் சட்டசபை தேர்தலுக்கும் இடைத்தேர்தலுக்கும் இடையே கூட்டணிகள் மாறிவிட்டது குறிப்பாக திமுகவிலிருந்து முக்கிய கட்சிகள் விலகிவிட்டன அதிமுக கூட்டணி என்ன நிலைமையில் இருக்கிறது என்பது இன்னும் தெளிவாகவில்லை அதே நேரத்தில் சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தமிழக வெற்றி கழகம் தற்போது பெரும் படையுடன் களம் இறங்குகிறது
தமிழகத்தில் தற்போது 7 தொகுதிகள் காலியாக இருக்கும் நிலையில் 2 தொகுதிகளுக்கு மட்டுமே தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் அக்டோபர் 6ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே அதிமுக சார்பில் விருப்ப மனு பெறப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால் விருப்பமனு நடவடிக்கைகள் இல்லாமலேயே திமுக தலைவர் ஸ்டாலின் வேட்பாளர்களை அதிரடியாக அறிவித்து களத்தில் இறக்கி இருக்கிறார்.
மதுராந்தகம் தொகுதியில் பரந்தாமனும், தாராபுரம் தொகுதியில் சுகன்யாவும் போட்டிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் மரகதம் குமரவேல், சத்யபாமாவும் தங்கள் ஏற்கனவே வென்ற தொகுதிகளில் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு வேட்பாளர்களை களத்தில் இறக்கினர்.
அடுத்த நாளே அதிமுகவின் 2 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. அதன்படி மதுராந்தகம் தொகுதியில் கணிதா சம்பத்தும், தாராபுரம் தொகுதியில் பானுமதியும் போட்டியிடுவார்கள் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். ஆனால் இன்னும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.
அதே நேரத்தில் கூட்டணி தொடர்பான பேச்சுகள்தான் தற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 2026 சட்டசபை தேர்தலுக்குப் பிறகு கூட்டணியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கின்றன. கடந்த சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அகில இந்திய பார்வர்டு பிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் நீதி மய்யம், தேமுதிக, எஸ்டிபிஐ, மனிதநேய ஜனநாயகக் கட்சி, முக்குலத்தோர் புலிப்படை, கொங்கு இளைஞர் பேரவை, திராவிட வெற்றிக் கழகம், புதிய திராவிட கழகம், கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம், ஆகியவை இருந்தன.
தற்போது அந்தக் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை தமிழக வெற்றிக்கழக கூட்டணிக்கு தாவி விட்டன. மேலும் தேர்தலில் இணைந்து போட்டியிடுவோம் எனவும் அவர்கள் சொல்லியுள்ளனர். அதே நேரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி தொடர்பாக தங்கள் முடிவை அறிவிக்கவில்லை. ஒருவேளை அவர்கள் தேர்தலில் இருந்து விலகி இருக்கும் முடிவை எடுக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
இதனால் திமுக கூட்டணியில் தேமுதிக, மக்கள் நீதி மையம் உள்ளிட்ட சிறிய கட்சிகள் மட்டுமே இருக்கின்றன. மற்றொருபுறம் 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, புதிய நீதி கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, புரட்சி பாரதம், ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றிருந்தன.
தற்போது புரட்சி பாரதம், தமாகா ஆகிய கட்சிகள் விலகிவிட்டன. பாஜக அதிமுகவுக்கு ஆதரவளித்திருக்கிறது. பாஜகவும் கூட்டணியில் தான் இருக்கிறது என சொல்கிறார்கள். ஆனால் பாமக இதுவரை தனது முடிவை அறிவிக்கவில்லை. இப்படியாக 2026 சட்டசபை தேர்தலுக்குப் பிறகு இடைத்தேர்தலில் கூட்டணி கட்சிகள் மாறி இருக்கும் நிலையில், யார் வெல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
