தமிழகத்தின் மிக முக்கிய சமூக மற்றும் அரசியல் சக்தியாக விளங்கிய ஒரு மூத்த அரசியல்வாதியின் இந்த அதிரடி ஓய்வு அறிவிப்பு, ஒட்டுமொத்த அரசியல் களத்தையும் உற்று நோக்க வைத்தது. இந்த அறிவிப்பை அடுத்து ராமதாஸ் எந்தவித அரசியல் கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறார். இதற்கிடையில், கடந்த 1ஆம் தேதி முதல் கட்சியினர் மற்றும் பொதுமக்களை சந்திப்பதாக முடிவு செய்து அதன்படி ராமதாஸ் தொடர்ந்து அவர்களை சந்தித்து வருகின்றார்.
இந்த நிலையில், ராமதாஸிடம் அரசியல் பேச வேண்டாம் என பொதுமக்களும், கட்சியினரும் பார்க்கக்கூடிய வகையில் ராமதாஸின் தைலாபுரம் இல்லம் முன்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில், ‘ராமதாஸ் அரசியல் துறவறம் மேற்கொண்ட காரணத்தால் தைலாபுரம் தோட்டத்தில் அவரை சந்திக்க வரும் பார்வையாளர்க்ள் தயவு செய்து அரசியல் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை ராமதாஸை பார்வையாளர்கள் சந்திக்கலாம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தன்னை சந்திக்க வருபவர்கள் யாரும் அரசியல் பேச வேண்டாம் என அவர் அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது அவரது இல்லம் முன்பு இப்படியான பேனர் வைக்கப்பட்டுள்ளது.
