அலகாபாத் : இரட்டை குடியுரிமை வழக்கில் காங்கிரஸ் எம்.பி-.,யும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு நம் நாட்டிலும், ஐரோப்பிய நாடான பிரிட்டனிலும் குடியுரிமை உள்ளதாக கடந்த 2019ல் குற்றச்சாட்டு எழுந்தது. அதில், ‘பிரிட்டனின் தலைநகரான லண்டனைச் சேர்ந்த ‘பேக்ஆப்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் இயக்குநராக இருந்தபோது, 2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில் தாக்கல் செய்யப்பட்ட ஆண்டறிக்கைகளில், ராகுல் தன் பிரிட்டன் குடியுரிமையை வெளிப்படுத்தி உள்ளார். தன் லண்டன் வீட்டு முகவரியையும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்’ என தெரிவிக்கப்பட்டது.
மேல்முறையீடு
சட்டவிரோதமாக இரட்டை குடியுரிமை பெற்றுள்ளதால், ராகுலின் எம்.பி., பதவியை பறிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் உரிய விளக்கமளிக்க, மத்திய உள்துறை அமைச்சகம் ராகுலுக்கு உத்தரவிட்டிருந்தது. இரட்டை குடியுரிமை வைத்துள்ள ராகுலின் பதவியை பறிக்கக் கோரி அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்தாண்டு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதையடுத்து, கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ., நிர்வாகி விக்னேஷ் சிஷிர், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார்.
ராகுல் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என அவர் அதில் வலியுறுத்தியிருந்தார். கடந்த ஜனவரியில் இந்த மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குடியுரிமை தொடர்பான விவகாரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம் தங்களுக்கு இல்லை என கூறி மனுவை நிராகரித்தது.
இதையடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் விக்னேஷ் சிஷிர் மேல்முறையீடு செய்தார். இந்த மனு, அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது விக்னேஷ் சிஷிர் முன்வைத்த வாதத்தில், ”ராகுலின் இரட்டை குடியுரிமை தொடர்பாக பிரிட்டன் அரசு அனுப்பிய மின்னஞ்சல்கள், ஆவணங்கள், நீதிமன்ற பரிசீலனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
” கடந்த 2004 லோக்சபா தேர்தலின்போது, லண்டனில் உள்ள ‘பார்க்லேஸ்’ வங்கியில் தனக்கு கணக்கு இருப்பதாக ராகுல் ஒப்புக் கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் தீர்ப்பு வழங்க வேண்டும்,” என வலியுறுத்தினார்.
விசாரணை
இதையடுத்து, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: ராகுலின் இரட்டை குடியுரிமை தொடர்பாக முறையான சரிபார்ப்பு அவசியம். இந்த விவகாரத்தில் அதிகாரப்பூர்வ ரகசியங்கள் சட்டம், பாஸ்போர்ட் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம் ஆகியவற்றின் கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது.
எனவே, ராகுல் மீது உத்தர பிரதேச போலீசார் உடனடியாக வழக்கு பதிய வேண்டும். உத்தர பிரதேச அரசே இது தொடர்பாக விசாரணை நடத்தலாம்; இல்லையென்றால், இந்த வழக்கை சி.பி.ஐ., உள்ளிட்ட பிற மத்திய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
