மிர்புர்: முதல் ஒருநாள் போட்டியில் அசத்திய நியூசிலாந்து அணி, 26 ரன் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
வங்கதேசம் சென்றுள்ள நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று மிர்புரில் நடந்தது. ‘டாஸ்’ வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. கேப்டன் டாம் லதாம், நிக்கோல்ஸ், வில் யங் என சிலரைத் தவிர பெரும்பாலும் சர்வதேச அனுபவம் அதிகம் இல்லாத வீரர்கள், நியூசிலாந்து அணியில் இடம் பெற்றிருந்தனர்.
நியூசிலாந்து அணிக்கு ஹென்றி நிக்கோல்ஸ், நிக் கெல்லி (7) ஜோடி துவக்கம் தந்தது. வில் யங் (30), லதாம் (14) கைவிட, நிக்கோல்ஸ் 68 ரன் எடுத்து கைகொடுத்தார். தனது இரண்டாவது ஒருநாள் போட்டியில் களமிறங்கிய பாக்ஸ்கிராப்ட், 58 பந்தில் 59 ரன் எடுத்தார். நியூசிலாந்து அணி 50 ஓவரில் 247/8 ரன் மட்டும் எடுத்தது. நாதன் ஸ்மித் (21) அவுட்டாகாமல் இருந்தார்.
டிக்னெர் கலக்கல்
வங்கதேச அணிக்கு துவக்கத்தில் தன்ஜித் (2), நஜ்முல் (0) அதிர்ச்சி தந்தனர். சயிப் ஹசன் (57), லிட்டன் தாஸ் (46) அணியை மீட்டனர். ஒரு கட்டத்தில் வங்கதேச அணி 184/4 என வலுவாக இருந்தது. கைவசம் 6 விக்கெட் உள்ள நிலையில் 57 பந்தில் வெற்றிக்கு 64 ரன் தேவைப்பட்டன.
இதன் பின் வேகத்தில் மிரட்டிய டிக்னெர், வரிசையாக விக்கெட்டுகளை சரிக்க, வங்கதேச அணி 48.3 ஓவரில் 221 ரன்னில் ஆல் அவுட்டானது.
டிக்னெர் 4, ஸ்மித் 3 விக்கெட் சாய்த்தனர்.
