அவர் பழைய ஆள், சந்திக்க முடியாது; அவமானம் கொடுத்த இயக்குனர்: நடிகர் வையாபுரி கண்ணீருடன் பகிர்ந்த சம்பவம்

தன்னை பழைய ஆள் என்று கூறி ஒரு இயக்குனர் சந்திக்க மறுத்ததால், இப்போது தான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓபன் செய்துள்ளதாக நடிகர் வையாபுரி, உருக்கமாக ஒரு சம்பவம் குறித்து பேசியுள்ளார். 

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்: 

சினிமா பல டெக்னாலஜிகளை நோக்கி வளர்ந்துகொண்டிருக்கும் இந்த காலத்தில், நடிப்புத்திறமை என்பதை கடந்து இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் பிரபலங்களாக இருந்தால் உடனடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்துவிடும் என்று சொல்லலாம். இதனால் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் அவர்கள் உடனடியாக சமூகவலைளங்களில் வீடியோக்களை பதிவிட தொடங்கிவிடுவார்கள். 

இதன் மூலம் பட வாய்ப்புகளைத் தேடும் நடிகர்களுக்கு சமூக வலைதளங்கள் நாளுக்கு நாள் முக்கியத்துவம் பெற்று வருவதை, இயக்குநர் ஒருவரிடம் தனக்கு ஏற்பட்ட சங்கடமான அனுபவம் உணர்த்தியதாக தெரிவித்துள்ள நடிகர் வையாபுரி, இதற்காகவே தான் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கம் ஓபன் செய்துள்ளதாக கூறியுள்ளார். துள்ளாத மனமும் துள்ளும், ஜெமினி, போக்கிரி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் காமெடி மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ள வையாபுரி, ஆகஸ்ட் 1ஆம் தேதி இன்ஸ்டாகிராமில் இணைந்தார்.

இதனிடையே, சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், தான் ஏன் இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கினேன் என்பது குறித்து வையாபுரி பேசியுள்ளார். அதில், “நான் இன்ஸ்டாகிராம் தொடங்கி ஒரு மாதம்தான் ஆகிறது. உண்மையாகச் சொன்னால், ஒரு லட்சம் பேர் என்னைப் பின்தொடர்வதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒருமுறை ஒரு மூத்த தயாரிப்பு மேலாளர் என்னைத் தொடர்புகொண்டு, இயக்குநர் ஒருவரைச் சந்திப்பதற்காக அலுவலகத்திற்கு வருமாறு அழைத்தார். நான் அங்கு போனபோது அந்த இயக்குநர் என்னைச் சந்திக்க மறுத்துவிட்டார்.

நான் இன்ஸ்டாகிராம் தொடங்கியதற்கான காரணம் இதுதான். ஒரு பெரிய தயாரிப்பு மேலாளர் ஒருமுறை என்னை அழைத்து, ‘அலுவலகத்திற்கு வாருங்கள். நமது இயக்குநரைச் சந்திக்கலாம்’ என்றார். அதனால் நான் இயக்குநரைச் சந்திக்கச் சென்றேன். ஆனால் அந்த இயக்குநர், ‘இவர் ஒரு பழைய ஆள். அவரைச் சந்திக்க எனக்கு விருப்பமில்லை என்று சொல்லிவிடுங்கள் என்று கூறிவிட்டார். இது எனக்கு அதிர்ச்சிகரமாக இருந்தது. நான் மிகவும் அவமானமாக உணர்ந்தேன். என்ன நடந்தது என்றே எனக்குப் புரியவில்லை. 

மேலாளர் வெளியே வந்தவுடன் என்னை அழைத்து, ‘இயக்குநர் உங்களைச் சந்திக்க விரும்பவில்லை’ என்றார். அதற்கான காரணத்தைக் கேட்டபோது, ‘இப்போதெல்லாம் இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மூலமாக நிறைய புதியவர்கள் வருகிறார்கள். அவர்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கிறார்கள். உங்களைப் போன்றவர்களை மிகவும் வயதானவர்களாகக் கருதுகிறார்கள்’ என்றார்” அவர் சொன்னது என்னை மிகவும் வேதனைப்படுத்தியதுடன், சமூக வலைதளங்களில் நான் இல்லாதது குறித்தும் சிந்திக்க தொடங்கினேன்.

அப்போது நான் ஏன் இன்ஸ்டாகிராம் கணக்கைத் தொடங்கக்கூடாது?’ என்று யோசிக்கத் தொடங்கினேன். அதைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் புதிய இயக்குநர்கள் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் மீது அதிக ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டேன். அதனால், குறைந்தபட்சம் நான் இன்னும் திரைத்துறையில் இருக்கிறேன் என்பதை அவர்களுக்கு நினைவூட்டும் வகையில், பல ஆண்டுகளாக நான் பெற்ற அனுபவங்களையும் கற்றுக்கொண்ட விஷயங்களையும் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அதனால்தான் இந்தக் கணக்கைத் தொடங்கினேன்” என்று அவர் கூறினார்.

தற்போது வையாபுரியின் இன்ஸ்டாகிராம் கணக்கைப் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை 1.71 லட்சத்தைக் கடந்துள்ளது. ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் அன்பு தனக்கு மிகவும் முக்கியமானதாக இருப்பதாகவும் நடிகர் தெரிவித்துள்ளார். உண்மையாகச் சொன்னால், இந்த ஒரு மாதத்திலேயே நீங்கள் என்மீது எவ்வளவு அன்பு வைத்திருக்கிறீர்கள், என்னைப் பற்றி எவ்வளவு அக்கறை கொண்டிருக்கிறீர்கள் என்பதை உணர்ந்துகொண்டேன். அதுவே எனக்கு போதுமானது” என்றார்.

நடிகராகத் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு முன்பு, வையாபுரி சென்னையில் ஹோட்டல் பணியாளராக வேலை செய்துள்ளார். பாரதிராஜா இயக்கிய கருத்தம்மா படத்தில் பஸ் கண்டெக்டராக சிறிய கேரக்டரில் நடித்திருப்பார். பாலு மகேந்திரா இயக்கிய நகைச்சுவைத் திரைப்படமான ராமன் அப்துல்லா மூலம் அவருக்கு திருப்புமுனை கிடைத்தது. அதன்பிறகு தமிழ்த் திரையுலகில் பரிச்சயமான முகமாக மாறினார். காதல் பள்ளி (1997), கமல்ஹாசனுடன் காதலா காதலா (1998) உள்ளிட்ட படங்களிலும் அவர் இணைந்து நடித்துள்ளார். 

விஜயுடன் துள்ளாத மனமும் துள்ளும் (1999), போக்கிரி, விக்ரமுடன் ஜெமினி (2002), அஜித்துடன் ராசி, அமர்க்களம் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். அவரது திரைப்பயணத்தில் குறிப்பிடத்தக்க கட்டமாக மணிரத்னம் இயக்கிய ராவணன் (2010) அமைந்தது. இப்படத்தில் அவர் திருநங்கை கேரக்டரில் நடித்திருந்தார். இந்தக் கேரக்டர் தனது திரைப்பயணத்தில் “மிகப்பெரிய திருப்புமுனை” என்று வையாபுரி ஏற்கெனவே குறிப்பிட்டுள்ளார்.

2017ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் வையாபுரி பங்கேற்றார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய அந்த நிகழ்ச்சியில், அவர் 84 நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்தார். சமீபகாலமாக ஆழி, டி.என். 2026 உள்ளிட்ட படங்களிலும், வாரண்ட்: விலங்கு உலகம் (Warrant: From the World of Vilangu) என்ற தொடரிலும் வையாபுரி நடித்துள்ளார்.



Source link