புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி வடகாடு கிராமத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான அ.வெங்கடாசலம் மகன்கள் ராஜபாண்டடியன் (அதிமுக ஜெ பேரவை மாநில துணைச் செயலாளர்), ராஜராஜன் இருவருக்கும் இடையே நடந்த சொத்து தகராறில் வியாழக் கிழமை காலை ராஜபாண்டியன் அவரது தம்பியான ராஜராஜனை விரட்டிச் சென்று கத்தியால் குத்தி எரிவாயு சிலிண்டரை தூக்கிப் போட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ராஜபாண்டியன் மற்றும் இந்த சம்பவத்திற்குக் காரணமாக இருந்தவர்களைக் கைது செய்யக் கோரி சாலை மறியல் செய்தனர். ராஜபாண்டியனை கைது செய்த தகவல் அறிந்து சாலை மறியல் கைவிடப்பட்டது. ஆனால் மற்றவர்களைக் கைது செய்யக் கோரி சடலத்தை எடுக்கவிடாமல் நிறுத்தி வைத்தனர். மாவட்ட எஸ்.பி ரவீந்திரகுமார் குப்தா பேச்சுவார்த்தை நடத்தி சடலத்தைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் ராஜராஜன் மனைவி கொடுத்த புகாரின் பேரில் ராஜபாண்டியன் மற்றும் அவரது அம்மா லெட்சுமி, மனைவி சுவிதா (அதிமுக மாவட்ட இணைச் செயலாளர்) மற்றும் ராஜபாண்டியன் சகோதரிகள் அவர்களின் குடும்பத்தினர் என 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்த வடகாடு போலிசார் ராஜபாண்டியன், சுவிதா, லெட்சுமி ஆகிய 3 பேரைக் கைது செய்துள்ளனர்.
அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று கோரி சடலத்தை வாங்க மறுத்த உறவினர்கள் பேச்சுவார்த்தைக்கு பிறகு ராஜராஜன் சடலத்தைப் பெற்று வீட்டிற்குக் கொண்டு வந்து இறுதிச் சடங்குகள் செய்து வீட்டு வாசலில் புதைக்க முயன்றனர். ஆனால் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் மறைந்த வெங்கடாசலம் நினைவிடம் அருகிலேயே அவரது மகன் ராஜராஜன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
