நெல்லை கல்வீச்சு சம்பவம்: ஊராட்சி மன்றத் தலைவர் உயிரிழப்பு; தப்பியோடிய நபருக்கு போலீஸ் வலை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள கண்ணனல்லூர் கிராமத்தில், குடிநீர் பற்றாக்குறையைக் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் அண்மையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில நாட்களாக சீரான குடிநீர் விநியோகம் இல்லாததால் ஆத்திரமடைந்த மக்களைச் சந்தித்து, நிலைமையை எடுத்துக்கூறி சமாதானப்படுத்த ஊராட்சி மன்றத் தலைவர் மகாராஜன் (54) நேரில் சென்றுள்ளார்.

போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, கூட்டத்தில் இருந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் திடீரென செங்கல்லால் மகாராஜனைத் தாக்கியுள்ளார். இந்த தாக்குதலில் தலையில் பலத்த காயமடைந்த அவர், நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் போராட்டத்தைக் கைவிட்டு, அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயன்றனர். இருப்பினும், சிகிச்சை அளிப்பதற்கு முன்பாகவே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள வள்ளியூர் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட நபர் யார் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தற்போது தலைமறைவாக இருக்கும் அவரைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுத் தேடப்பட்டு வருவதாகவும் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் சாஸ்திரி தெரிவித்துள்ளார். குற்றவாளி விரைவில் கைது செய்யப்படுவார் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

Source link