ஆசிய கோப்பை வென்றது இந்தியா: பைனலில் வீழ்ந்தது இலங்கை

துபாய்: ஆசிய கோப்பை ‘டி-20’ தொடரில் இந்திய பெண்கள் அணி சாம்பியன் ஆனது. பைனலில் இலங்கையை 72 ரன்னில் வீழ்த்தியது.

துபாய், சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 10வது பெண்கள் ஆசிய கோப்பை ‘டி-20’ தொடர் நடந்தது. நேற்று நடந்த பைனலில் 7 முறை சாம்பியன் இந்தியா, ‘நடப்பு சாம்பியன்’ இலங்கை அணியை எதிர்கொண்டது. ‘டாஸ்’ வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் பிரதிகாவுக்குப் பதில் கமலினி (தமிழகம்) சேர்க்கப்பட்டார்.

இரண்டு அரைசதம்

இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷபாலி வர்மா ஜோடி துவக்கம் கொடுத்தது. இலங்கை அணி கேப்டன் சமாரி அத்தபத்து 5வது ஓவரை வீசினார். முதல் பந்தில் பவுண்டரி அடித்த ஷபாலி, 3, 6வது பந்துகளை சிக்சருக்கு விரட்டினார். இந்த ஓவரில் மொத்தம் 20 ரன் எடுக்கப்பட்டன. தொடர்ந்து மிரட்டிய ஷபாலி 24 பந்தில் அரைசதம் அடித்தார்.

இவருக்கு கைகொடுத்த ஸ்மிருதி, சர்வதேச ‘டி-20’ல் 36 வது அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 129 ரன் சேர்த்த போது, ஷபாலி (39 பந்து, 68 ரன்), ஸ்மிருதி (59) வெளியேறினர். அடுத்து வந்த ஹர்மன்பிரீத் (14), ரிச்சா (17) சற்று உதவினர். கடைசி ஓவரில் கமலினி 15 ரன் (5 பந்து) எடுத்தார். இந்திய அணி 20 ஓவரில் 183/5 ரன் எடுத்தது.

எளிய வெற்றி

இலங்கை அணிக்கு இமேஷா (4), சமாரி அத்தபத்து ஜோடி துவக்கம் தந்தது. சமாரி 36 ரன்னில் தீப்தி சுழலில் வீழ்ந்தார். தொடர்ந்து அசத்திய தீப்தி, விஷ்மியை (20) போல்டாக்கினார். ஸ்ரீசரணி பந்துவீச்சில் ஹர்ஷித்தா (9), நிலாக்சிகா (22), கவிஷா (7) என வரிசையாக வெளியேறினர்.

ஷபாலி பந்தில் ஹாசினி (1) வீழ்ந்தார். கடைசியில் கவுஷினி (9) அவுட்டாக, இலங்கை அணி 20 ஓவரில் 111 ரன்னில் ஆல் அவுட்டானது. இந்தியாவின் ஸ்ரீசரணி 4, தீப்தி 3 விக்கெட் சாய்த்தனர். இந்திய அணி இத்தொடரில் 8வது முறையாக கோப்பை வென்றது.

அதிவேக அரைசதம்

ஆசிய கோப்பை ‘டி-20’ அரங்கில் அதிவேக அரைசதம் அடித்த வீராங்கனை ஆனார் ஷபாலி. இவர் நேற்று 24 பந்தில் அரைசதம் எட்டினார். முன்னதாக 2022ல் இந்தியாவின் ஸ்மிருதி, 25 பந்தில் இந்த இலக்கை அடைந்திருந்தார்.

* தவிர, இது சர்வதேச ‘டி-20’ல் ஷபாலியின் 21வது அரைசதம் ஆனது.


400 பவுண்டரி

சர்வதேச ‘டி-20’ல் 400 பவுண்டரி என்ற மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்திய வீராங்கனை ஆனார் ஷபாலி. இவர், 116 போட்டியில் 404 பவுண்டரி அடித்துள்ளார். முதல் இரு இடத்தில் ஸ்மிருதி மந்தனா (176ல் 639), ஹர்மன்பிரீத் கவுர் (207ல் 408) உள்ளனர்.

Source link