திமுக, அதிமுக, தவெக, கம்யூக்கள் ,நா த க என… 5 முனை போட்டி!:கலகலக்கப் போகிறது தாராபுரம், மதுராந்தகம் சட்டசபை இடைத்தேர்தல்

சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகளில், தி.மு.க., – அ.தி.மு.க., – த.வெ.க., – கம்யூனிஸ்டுகள் – நா.த.க., என, ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளது. த.வெ.க., சந்திக்கும் முதல் இடைத்தேர்தலில், ஐந்து முனை போட்டி ஏற்பட்டுள்ளதால், இரு தொகுதிகளும், அரசியல் தலைவர்கள் முற்றுகையால் கலகலக்கப் போகிறது.

கடந்த சட்டசபை தேர்தலில், சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற, த.வெ.க., தலைவரும், முதல்வருமான விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தார்.

வழக்குகள் நிலுவை

மதுராந்தகம், தாரா புரம், அம்பாசமுத்திரம், விராலிமலை, கரூர், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் வென்ற அ.தி.மு.க., — எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர், தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து விட்டு, த.வெ.க.,வில் இணைந்தனர். இதனால், ஏழு சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.

இவற்றில், மதுராந்தகம், தாராபுரம் சட்டசபை தொகுதிகள் தவிர, மீதமுள்ள ஐந்து தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே, அந்த தொகுதி களை தவிர்த்து விட்டு, மதுராந்தகம், தாரா புரம் தொகுதிகளுக்கு, அடுத்த மாதம் 6ம் தேதி இடைத்தேர்தல் நடக்கும் என, தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து, அ.தி.மு.க.,வில் இருந்து த.வெ.க.,வில் இணைந்த மரகதம் குமரவேல் – மதுராந்தகம் தொகுதியிலும், சத்யபாமா – தாராபுரம் தொகுதியிலும், த.வெ.க., வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுபோல மதுராந்தகத்தில், தி.மு.க., சார்பில் பரந்தாமன், அ.தி.மு.க., சார்பில் கணிதா சம்பத், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜானகிராமன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஆதரவு

தாராபுரத்தில், தி.மு.க., சார்பில் சுகன்யா, அ.தி.மு.க., சார்பில் பானுமதி, நா.த.க., சார்பில் கார்த்திகா ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், த.வெ.க., அரசுக்கு வெளியிலிருந்து ஆதரவு அளித்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகள், இடைத்தேர்தலில் என்ன நிலை எடுப்பது என்பது குறித்து ஆலோசித்தன. திருச்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டமும், சென்னையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழு கூட்டமும் நடந்தன. அவற்றில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைந்து, இடைத்தேர்தலை சந்திக்க முடிவு செய்யப்பட்டது. இதனால், இரு தொகுதிகளிலும் ஐந்து முனை போட்டி உருவாகி உள்ளது.

சென்னையில் இ.கம்யூ., தமிழக செயலர் வீரபாண்டியன் அளித்த பேட்டி:

தற்போதுள்ள அரசியல் சூழலில், எந்த கூட்டணியிலும் இடம் பெறுவதில்லை என இந்திய கம்யூனிஸ்ட் முடிவெடுத்துள்ளது. அந்த நிலைப்பாட்டை தொடர, கட்சியின் நிர்வாகக் குழு தீர்மானித்து உள்ளது.

சட்டசபை தேர்தல் முடிந்ததும், தமிழகத்தில் கவர்னர் ஆட்சி அல்லது பா.ஜ., ஆதரவு ஆட்சி வந்து விடக்கூடாது என்பதற்காக, மக்கள் தீர்ப்புக்கு மதிப்பு கொடுத்து, த.வெ.க., அரசை வெளியிலிருந்து ஆதரிப்போம் என தெரிவித்தோம். த.வெ.க., அமைச்சரவை மற்றும் கூட்டணியிலும் நாங்கள் பங்கேற்கவில்லை.

இந்த இடைத்தேர்தல் என்பது இயல்பானதாக இல்லாமல், திணிக்கப்பட்ட தேர்தலாக உள்ளது. எனவே, தாராபுரத்தில் இ.கம்யூ., கட்சியும், மதுராந்தகத்தில் மா.கம்யூ., கட்சியும் போட்டியிடும். வரும் 15ம் தேதி வேட்பாளர் தேர்வு கூட்டம் நடத்தி, வேட்பாளரை அறிவிப்போம்.

த.வெ.க., அரசுக்கு அளிக்கும் ஆதரவு தொடர்கிறது. அரசின் குற்றங்களை சுட்டிக்காட்டி, எங்களின் பிரசாரம் இருக்கும். தமிழகத்தில் அதிகரித்துள்ள போதை கலாசாரம், வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவை குறித்தும் பிரசாரம் செய்வோம்.

தனியார் பல்கலை திருத்த சட்ட மசோதா போன்றவற்றை, ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வருகிறோம். எங்களை ஜனநாயக சக்திகள் ஆதரிப்பர். தி.மு.க.,வில் இருந்து, எங்களிடம் யாரும் ஆதரவு கேட்கவில்லை.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருச்சியில் மா.கம்யூ., தமிழக செயலர் சண்முகம் அளித்த பேட்டி:

இந்த இடைத்தேர்தல், திணிக்கப்பட்ட தேர்தல். அ.தி.மு.க.,வில் வென்ற இரண்டு எம்.எல்.ஏ.,க்கள், 20 நாட்களில் ராஜினாமா செய்ததில், எந்த நியாயமும் இருக்க முடியாது. இது, ஆரோக்கியமற்ற அரசியலுக்கே வழிவகுக்கும்.

த.வெ.க., அரசுடன் எங்களுக்கு நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. சட்டசபை என்பது, ஜனநாயகப்பூர்வமாக மக்கள் பிரச்னைகள் குறித்து பேசும் இடமாக இருக்க வேண்டும்.

இந்த இடைத்தேர்தலில், ஏற்கெனவே மூன்று அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாங்கள் மூன்று அணிகளிலும் இல்லை.மேலும், இது பொதுத் தேர்தலோ, ஆட்சி மாற்றத்துக்கான தேர்தலோ இல்லை. த.வெ.க., அரசுக்கு வெளியில் இருந்து அளித்து வரும் எங்களின் ஆதரவு தொடரும்; ஆட்சிக்கு ஆபத்து இல்லை.

இடைத்தேர்தலில் த.வெ.க.,வுக்கு ஆதரவு இல்லை என்பதால், எங்கள் முடிவை தி.மு.க., ஆதரவு நிலைப்பாடு என்று கூறுவது தவறு.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

த.வெ.க., வேட்பாளர்கள் வரும் 16ல் மனு தாக்கல்
ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி:
தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் அக்., 6ல் நடக்கும் இடைத்தேர்தலில், த.வெ.க., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், வரும் 16ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்வர். பிரசாரத்துக்கு முதல்வர் விஜய் வருவது குறித்து பின்னர் தெரிவிப்போம். இடைத்தேர்தலில், த.வெ.க.,வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
விமர்சனங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி எங்களுக்கு உள்ளது; அதேநேரம், விமர்சனங்கள் நேர்மையாக இருப்பது அவசியம்.
காற்றாலை மின்சாரம் மொத்தமாக முடங்கி விட்டது. முந்தைய நாட்களை விட, தற்போது மின்வெட்டின் அளவு குறைந்திருப்பது மக்களுக்கு நன்றாக தெரிந்திருக்கும். அண்டை மாநிலங்களில் எட்டு மணி நேரம் மின்வெட்டு உள்ளது. அடுத்தாண்டு இறுதிக்குள், 25 லட்சம் பேருக்கு பட்டா வழங்கும் நடவடிக்கையை அரசு எடுத்து
வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Source link