“ஆபாச பேச்சு தான் கடைசி ஆயுதமா?”

மிசா சட்டத்தில் முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கைதாகவில்லை என்று முதல்வர் விஜய் உள்ளிட்ட தவெக அமைச்சர்கள் குற்றம் சாட்டியது தமிழக அரசியலில் பேசுபொருளானது. குறிப்பாக, முதல்வர் விஜய் மிசா குறித்து பேசும் போது, மு.க.ஸ்டாலினைச் சைகை மூலம் உருவக் கேலி செய்யும் விதமாகப் உடல்மொழி செய்ததாக சர்ச்சை எழுந்தது. இதற்கு திமுக முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட திமுகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். 

இந்த சூழலில், முதல்வர் விஜய்யைக் கண்டித்து மாநிலம் முழுவதும் நேற்று (12-09-26) மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த வகையில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, மிசா குறித்த அமைச்சர் நிர்மல்குமாரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்து பேசினார். அப்போது அமைச்சர் நிர்மல்குமாரை இழிவுப்படுத்தும் விதமாக மிகவும் ஆபாசமாக பேசினார். இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆ.ராசா பேச்சுக்கு அமைச்சர் நிர்மல்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார் இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “மேடைபோட்டு என்னை பற்றியும் எங்கள் தலைவர் குறித்தும் ஆபாசமாக பேச வைப்பதுதான் உங்களின் கடைசி ஆயுதமா? நேற்று ஆர்பாட்டம் என்ற பெயரில் உங்கள் கட்சியினர் நடத்திய ஆபாச நாடகம் தமிழக மக்கள் குறிப்பாக பெண்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது என்பதை என்று உணர்வீர்கள். எப்போதெல்லாம் திமுகவை நோக்கி ஊழல், துரோகம், உங்களின் பொய்கள் பற்றி கேள்வி எழுகிறதோ அன்று திமுக எடுக்கும் ஆயுதம் வன்முறை அல்லது ஆபாச பேச்சு.

தரமற்ற திமுகவினரின் பேச்சுக்களை அவர்களின் இல்லத்தில் உள்ள பெண்கள், குழந்தைகளிடம் காட்ட முடிகிறதா? திமுகவால் அரசியலை விட்டு ஒதுங்கிய மக்கள் இன்று விஜயால் மீண்டும் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ளனர். அரசியலில் ஒவ்வொரு அசைவும் மக்களால் தணிக்கை செய்யப்படுகிறது என்பதை உணர்கிறீர்களா மு.க.ஸ்டாலின்? குழந்தைகள், பெண்களில் முகமாக இருக்கும் முதல்வரின் தவெகவை எதிர்கொள்ள திராணி இல்லாமல் தெருவில் இறங்கி திமுகவினர் செய்யும் அட்டூழியங்களை என்றும் நேர்மையாக மட்டுமே எதிர்கொள்வோம். நீங்கள் திருந்துவதற்கு வாய்பில்லை, அதேநேரம் தமிழக அரசியலில் இருந்து திமுகவின் முடிவுரையை விரைவில் மக்கள் எழுதுவார்கள் என்பது மட்டும் நிச்சயம்.
புரட்சி தலைவர் கூறியதை தான் மீண்டும் … மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன், தீமைகள் எந்த ரூபத்தில் தமிழகத்திற்கு வந்தாலும் அது தீயசக்தி திமுகவால் மட்டுமே!” எனத் தெரிவித்துள்ளார்.

Source link