இந்தியா – பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான உறவில் புதிய உச்சம்! பாரிஸ் ஹிந்து கோவில் திறப்பு விழாவில் மோடி பெருமிதம்

புதுடில்லி: “இந்தியா – பிரான்ஸ் இடையிலான உறவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பாரிசில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோவில், இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட வாய்ப்புகளின் அடையாளமாக, பல நுாற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும்,” என, பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிஸ் அருகே, பிரமாண்ட ஹிந்து கோவில் கட்டப்பட்டுள்ளது. ‘பாப்ஸ் சுவாமிநாராயண் ஹிந்து மந்திர்’ என்ற பெயரிலான இந்த கோவில், நேற்று முன்தினம் திறக்கப்பட்டது.

இந்த விழாவில், ‘வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: உலகெங்கும், ‘பாப்ஸ்’ அமைப்பால் நிறுவப்பட்டுள்ள கோவில்கள், இந்தியாவின் தத்துவ மரபுகள் மற்றும் மனித மதிப்புகளை சர்வதேச சமூகங்களிடம் கொண்டு சேர்க்க உதவுகின்றன.

ஒத்துழைப்பு

பாரிசில் கட்டப்பட்டுள்ள சுவாமிநாராயண் கோவில், இந்தியா – பிரான்ஸ் இடையிலான ஒத்துழைப்பு மற்றும் பகிரப்பட்ட வாய்ப்புகளின் அடையாளமாக, பல நுாற்றாண்டுகளுக்கு நிலைத்திருக்கும். இந்த கோவிலில் உள்ள பல கற்கள் இந்தியாவில் செதுக்கப்பட்டன.

இதன் வாயிலாக, இந்தியாவின் பழமையான கைவினைத்திறன், பிரான்சின் நவீன பொறியியல் நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் மூலம், இந்திய கலாசாரம், ஆன்மிகம் சார்ந்த விஷயங்கள் பிரான்சை தாண்டி, ஐரோப்பா முழுதும் உள்ள சமூகங்களுக்கு பயனளிக்கும்.

பக்தியுடன் இணைந்து சேவையாற்றும் மையங்களாகவே சுவாமிநாராயண் கோவில்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கோவிலும், அதேபோல் செயல்படும் என நம்புகிறேன்.

எதிர் காலத்தில் நேரம் கிடைக்கும்போது, இந்த கோவிலுக்கு நிச்சயம் வருவேன். சமீப காலங்களில், இந்தியா – பிரான்ஸ் இடையிலான உறவுகள் புதிய உயரத்தை எட்டியுள்ளன. என் நண்பரான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உடன் இணைந்து, இரு தரப்பு உறவை மேம்படுத்தி வருகிறேன்.

தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, ராணுவம், விண்வெளி, பருவநிலை மாற்றம் என, பல துறைகளில் இந்தியாவும், பிரான்சும் புதிய உத்வேகத்துடனும், ஆற்றலுடனும் இணைந்து பணியாற்றி முன்னேற்றம் கண்டு வருகின்றன. 2026ஐ நாங்கள் இந்தியா – பிரான்ஸ் புத்தாக்க ஆண்டாக கொண்டாடுகிறோம்.

பிரான்சில் இந்திய வீரர்கள் செய்த தியாகம், இன்றளவும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறது என்பதற்கு வரலாறு சாட்சியாக உள்ளது.

சமஸ்கிருதத்தை பிரபலப்படுத்துவதில் பிரெஞ்சு அறிஞர்கள் ஆற்றிய முக்கிய பங்கை மொழி ஆர்வலர்கள் அறிவர்.

ஆன்மிக உறவு

ராமகிருஷ்ண பரமஹம்சர் மற்றும் சுவாமி விவேகானந்தர் குறித்த ரோமன் ரோலன்டின் எழுத்துகள், நம் சமூகங்களை நெருக்கமாக்கின. ஸ்ரீ அரவிந்தரின் ஆன்மிக ஒத்துழைப்பாளரான அன்னையின் புதுச்சேரி பயணம், ஸ்ரீல பிரபுபாத சுவாமியின் பிரான்ஸ் பயணம் ஆகியவை, இரு நாடுகளுக்கு இடையிலான ஆன்மிக உறவை வலுப்படுத்துகிறது.

இன்று, நம் நாடுகளுக்கு இடையே மக்கள் தொடர்புகளுக்கான பாலமாக யோகா மாறியுள்ளது. சர்வதேச யோகா தினத்தன்று புகழ்பெற்ற ஈபிள் கோபுரத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள், பிரான்சில் யோகாவின் மகத்தான பிரபலத்தை பிரதிபலித்தன.

புதிதாக திறக்கப்பட்ட சுவாமி நாராயண் கோவில், பிரான்சுடனான இந்தியாவின் கலாசார உறவில் ஒரு முக்கிய அத்தியாயத்தை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

பாரம்பரிய முறையில் உருவாக்கம்

‘பாப்ஸ்’ என அழைக்கப்படும் போச்சாசன்வாசி ஸ்ரீ அக் ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா என்ற அமைப்பு, பாரிஸ் அருகே உள்ள புஸ்ஸி செயின்ட் ஜார்ஜஸ் பகுதியில் புதிய சுவாமிநாராயண் கோவிலை கட்டியுள்ளது. பிரான்சில், நம் நாட்டின் பாரம்பரிய முறையில் செதுக்கப்பட்ட கற்களை கொண்டு கட்டப்பட்ட முதல் பிரமாண்ட ஹிந்து கோவில் இது.
கோவிலுக்கான கற்கள் அனைத்தும், நம் நாட்டில் உள்ள திறமையான கைவினை கலைஞர்களால் மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டன. பின், இந்த கற்கள் பிரான்சுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அந்நாட்டு நவீன பொறியியல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒன்றோடொன்று இணைத்து கட்டப்பட்டுள்ளன.

Source link