பிரிக்ஸ் அமைப்பின் 18 ஆவது உச்சி மாநாடு டெல்லியில் இன்று (12-09-26) மதியம் தொடங்குகிறது. இந்த மாநாடு, இந்திய அரசின் தலைமையில் 2 நாள்கள் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், பல்வேறு நாட்டின் முக்கியத் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
குறிப்பாக, ரஷ்யா, சீனா, ஈரான் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ரஷ்ய அதிபர் புதின், இந்த மாநாட்டில் கலந்துகொள்ள நேற்று இந்தியா வந்தடைந்தார்.
இந்நிலையில், அண்டை நாடான சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங் இன்று காலை டெல்லி வந்தடைந்தார். அவருடன் சீன மூத்த அதிகாரிகளும் வருகை தந்துள்ளனர். இந்நிலையில், விமான நிலையத்தில், சீன அதிபர் ஷி ஜின்பிங் தலைமையிலான குழுவினருக்கு இந்திய அரசின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தப் பயணத்தில், சீன அதிபர் ஜின்பிங், பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை 5.45 மணிக்கு நேரில் சந்தித்து உரையாடவுள்ளார். இந்தச் சந்திப்பில், இருநாடுகள் இடையேயான முக்கிய உறவுகள், இந்திய-சீன எல்லைப் பிரச்சனைகள் குறித்த பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகை தந்த ஷி ஜின்பிங், 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வருகை தந்துள்ளார். இந்த சந்திப்பில் இரு நாட்டு உறவும் மேலும் வலுப்படும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, புவிசார் அரசியலில் உலக நாடுகளிடையே பல்வேறு விதமான அரசியல் சூழல்கள் நிலவுகின்றன. இந்நிலையில், உலக அளவில் மிக முக்கியமான இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான இந்த சந்திப்பில் எடுக்கப்படும் முடிவுகள் உலக அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாகவும் சில கணித்துள்ளனர்.
