புதுடில்லி: இந்தியாவுக்கு சொந்தமான பகுதிகளை சீனா ஆக்கிரமித்து விட்டதாக காங்கிரஸ் அடிக்கடி குற்றம்சாட்டி வருகிறது. இதனை மத்திய அரசும், ராணுவமும் திட்டவட்டமாக மறுத்து வருகிறது.
இந்நிலையில் அக்கட்சியின் செய்தித்தொடர்பாளரான ரிது சவுத்ரி சமூக ஊடகத்தில் இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்துவிட்டது எனக்கூறி இரண்டு வீடியோக்களை சமூக ஊடகத்தில் வெளியிட்டார்.
முதல் வீடியோவில், இந்திய பகுதிக்குள் சீன வாகனங்கள் நுழைந்துவிட்டது எனக்கூறியிருந்தார்.
அந்த வீடியோவை ஆய்வு செய்த இந்திய ராணுவம் வெளியிட்ட பதிவில், ” இந்தியா – சீனா எல்லையில் உள்ள வர்த்தக பாதையான சிக்கிமில் உள்ள நாதுலா பாஸ் வழியாக செல்லும் வாகனங்கள் இந்த வீடியோவில் உள்ளது. அங்கீகரிக்கப்பட்ட வர்த்தக பாதையில் வணிக வாகனங்களின் இயக்கம், சீன ராணுவ ஊடுருவல் என தவறாக சித்தரிக்கப்படுகிறது,” எனக்கூறியது.
ரிது சவுத்ரி வெளியிட்ட இரண்டாவது வீடியோவில் கிரிஷ் காலியா என்ற ராணுவ அதிகாரி, அருணாச்சல்லில் இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்து விட்டது என்று கூறுவது போன்ற காட்சி இடம்பெற்றது.
இந்த வீடியோவை ஆய்வு செய்த ராணுவம் வெளியிட்ட விளக்கத்தில்,” எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடக்கும் ஊடுருவல் குறித்து, 2023 அக்டோபர் 27 ல் ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் எடுக்கப்பட்ட வீடியோவை டீப் பேக் வாயிலாக மாற்றி வெளியிடப்பட்டது. அருணாச்சல பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்தாகவோ அல்லது இந்திய ராணுவத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவோ அந்த அதிகாரி கூறவில்லை ,” எனக்கூறியது.
கண்டனம்
இதனையடுத்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ வெளியிட்ட அறிக்கையில்,” இந்திய ராணுவத்தின் பிம்பத்தை கெடுக்கும் முயற்சி நடக்கிறது. இதற்காக ஏஐ தொழில்நுட்பம் வாயிலாக உருவாக்கிய போலி வீடியோவை காங்கிரஸ் பரப்புகிறது. இதற்காக அக்கட்சி மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இது ஒரு துரோக செயல். நம் எதிரிகளின் இழிவான செயல்களுக்கு இணையானது. இந்தியாவின் எதிரிகளுக்காக காங்கிரஸ் அருவருப்பான பிரசாரததை முன்னெடுக்கிறது,” எனக்கூறினார்.
