ஜகார்த்தா: இந்தோனேஷியாவின் ஜாவா கடல் பகுதியில் 240 பயணிகளுடன் சென்ற பயணிகள் கப்பல், மோசமான வானிலை காரணமாக கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. மாயமான கப்பலையும், அதில் இருந்த பயணிகளையும் மீட்க கடலோர காவல்படை மற்றும் மீட்புக் குழுவினர் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் இருந்து, போர்னியோ தீவில் உள்ள தெற்கு கலிமந்தன் பகுதியை நோக்கி பயணிகள் கப்பல் ஒன்று புறப்பட்டுச் சென்றது. அதில் பயணிகள் மற்றும் ஊழியர்கள் உட்பட மொத்தம் 240 பேர் பயணித்தனர்.
கப்பல் ஜாவா கடல் பகுதியை கடந்து கொண்டிருந்த போது, அப்பகுதியில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய மோசமான வானிலை நிலவியது. இதில் கப்பலின் தகவல் தொடர்பு சாதனங்கள் செயலிழந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கட்டுப்பாட்டு மையத்துடனான அதன் தொடர்பு முழுமையாகத் துண்டிக்கப்பட்டது.
நீண்ட நேரமாகியும் கப்பலில் இருந்து எந்தவொரு தகவலும் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த அதிகாரிகள், உடனே மீட்புக் குழுவினரை உஷார்படுத்தினர். கடற்படை, கடலோர காவல் படை மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் தேடுதல் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர்கள் மற்றும் அதிநவீன ரோந்து படகுகள் மூலம் ஜாவா கடல் பரப்பில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால், கப்பலைத் தேடும் பணியில் பெரும் சவால்கள் நீடித்து வருகின்றன. நடுக்கடலில் மாயமான கப்பலில் 240 பேர் உள்ளதால், அவர்களது கதி என்னவென்று தெரியாமல் குடும்பத்தினரும் உறவினர்களும் பெரும் அச்சத்திலும் சோகத்திலும் ஆழ்ந்துள்ளனர்.
