இந்தத் தேர்தலில், ஓட்டுக்கு இரண்டாயிரம் ரூபாய் தி.மு.க கொடுக்கிறது. தமிழ்நாடு முழுவதும் பதிமூனாயிரம் கோடி ரூபாயை வாக்குக்காக மட்டும் கொடுத்துக்கொண்டிருக்கிறது. ஐந்து ஆண்டுகாலம் ஆட்சி செய்த தி.மு.க எதைச் சொல்லி ஓட்டு கேட்கப் போகிறது? எதையுமே செய்யவில்லை.
இப்போது, `எட்டாயிரம் ரூபாய் கூப்பன் தருகிறேன்’ என்று ஓட்டு கேட்கிறார் ஸ்டாலின். உங்களுக்கு மானம், ஈனம் எதுவும் கிடையாது. எட்டாயிரம் ரூபாய் கூப்பனை வைத்துதான் நீங்கள் தேர்தலை நடத்துகிறீர்களா? அதுவும் டூப்ளிகேட் கூப்பன். ஐந்து ஆண்டுகாலம், மக்களுக்கு என்னதான் செய்தீர்கள்?
சமீபத்தில், வி.சி.க தலைவர் திருமாவளவன் ஒரு இடத்தில் பேசுகிறார். தி.மு.க தலைவர் ஸ்டாலின், `வி.சி.க கட்சி சார்பாக கே.வி.குப்பம் தொகுதியில் நீங்களும் போட்டியிட வேண்டும்’ என்று திருமாவளனிடம் கோரிக்கை வைத்தாராம்.
உடனடியாக திருமாவளவன் அதை ஏற்க மறுத்து, `அங்கு என்னைப் போன்ற ஒடுக்கப்பட்ட சமுதாயத்துக்கான தலைவர் ஜெகன்மூர்த்தி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எங்கள் கட்சி போட்டியிடாது’ என்று சொல்லியிருக்கிறார்.

உண்மையிலேயே, திருமாவளவனைப் பாராட்டுகிறேன். இதுதான் சரியான மனநிலை. எங்களுக்கும், அவருக்கும் கட்சி வேறுபாடு, கருத்து வேறுபாடு, கொள்கை வேறுபாடு இருக்கலாம். ஆனால், சமூகநீதி, ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராட, பாடுபட நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்திருக்கிறோம்.
இதில், தி.மு.க-வின் மனநிலையை நீங்கள் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். பட்டியலினத் தலைவர்கள் இருவரும் மோத வேண்டும். அப்போதுதான் தி.மு.க குளிர்காயும். வன்னியர்களும், பட்டியலின மக்களும் அடித்துக்கொள்ள வேண்டும். இதுதான் தி.மு.க-வின் சூழ்ச்சி. இதைத்தான் காலங்காலமாக தி.மு.க செய்துகொண்டிருக்கிறது.
இந்த மண்ணுக்குச் சொந்தமான பூர்வகுடி மக்கள் நாம். எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து படித்து வேலைக்குப்போக வேண்டும். மானம் மரியாதையோடு வாழ வேண்டும். தி.மு.க-வின் சூழ்ச்சியில் நீங்கள் விழக்கூடாது. நமக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். இன்னும் எவ்வளவு காலமாக அடிமையாக இருப்போம். நாம் எல்லோரும் ஒன்றுசேர வேண்டும்’’ என்றார் அன்புமணி ராமதாஸ்.
