“இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும்” – சி.டி.ஆர். நிர்மல் குமார் உறுதி!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி மாணவர்கள் நடத்தக்கூடிய போராட்டங்களில் கல்லூர் மாணவர்கள் பங்கேற்கத் தடை விதித்து சுற்றறிக்கை அனுப்பப்பட்ட விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அதேபோன்று திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறையில் மார்க்சிஸ்ட் மற்றும் இடதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ள அனுப்பப்பட்ட சுற்றறிக்கையும் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம், தலைமைச் செயலாளர் சாய் குமாரை மாற்றக் கோரி முதலமைச்சர் விஜய்க்குக் கடிதமும் எழுதியிருந்தார். மேலும் இந்த விவகாரங்கள் தொடர்பாகச் சட்டப்பேரவையிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இந்நிலையில், இந்த விவகாரங்கள் தொடர்பாகச் சென்னையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்தை அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ் மோகன் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் இன்று (04.09.2026) மாலை சந்தித்துப் பேசினர் 

இதனையடுத்து அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “சி.பி.எம். அலுவலகத்தில் தலைவர்களைச் சந்தித்துப் பேசுவதற்காக வந்தது ஏனென்றால், நீண்ட நாட்கள் ஆகிவிட்டது. பொதுவாக, தூய்மைப் பணியாளர்கள் பிரச்சினை குறித்து இன்று பேசி முடித்திருக்கிறோம். அதேபோக, டாஸ்மாக் பிரச்சினை, டாஸ்மாக் ஊழியர்களுக்கு 30 ஆயிரத்துக்கும் மேல் சம்பளம் உயர்த்திக் கொடுத்து, இன்று நிறைய இடங்களில் போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது. அது சம்பந்தமாகவும் பேசினோம். தோழர் சண்முகம் உள்ளிட்ட அனைவருடனும் பொதுவான ஒரு சந்திப்புதான். ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பாகத்தான் சந்தித்துவிட்டு நாங்கள் வந்திருக்கிறோம். மற்றபடி வேறு ஒன்றும் இல்லை. 

ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்புதான். குஜிலியம்பாறை வட்டாட்சியர் மற்றும் தலைமைச் செயலாளர் விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வருத்தம் தெரிவிக்கப்பட்டது. அது அரசுடைய கவனத்துக்கு வராமல் நடந்த விஷயம். கண்டிப்பாக அரசின் கவனத்துக்கு வராமல், அந்த வட்டாட்சியர் அவரே தன்னிச்சையாக எடுத்த முடிவு. அதற்கு அப்போதே வருத்தம் தெரிவிக்கப்பட்டது. அதேபோல்,  பல்கலைக்கழகத்தில்  இருந்து அனுப்பப்பட்ட சுற்றறிக்கையும் திரும்பப் பெறப்பட்டது. அதற்கும் வருத்தம் தெரிவிக்கப்பட்டது. ஏனென்றால், அது அரசுக்குத் தெரியாமல் நடந்த ஒரு நிகழ்வு. 

இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளப்படும் என்பதை நாங்கள் உறுதி அளித்தோம்” எனத் தெரிவித்தார். மேலும் வரும் 9ஆம் தேதி த.வெ.க. ஆதரவு கட்சிகளின் கூட்டம் நடைபெற உள்ளதாகவும் அது தொடர்பாகவும் இந்த சந்திப்பின் போது பேசப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் த.வெ.க. அரசுக்கு கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவளித்து வரும் நிலையில், பல்வேறு விவகாரங்களில் கம்யூனிஸ்ட் கட்சி அரசுக்கு எதிராக பல்வேறு அறிக்கைகளையும் வெளியிட்டுள்ள சூழலில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Source link