வாஷிங்டன்: அமெரிக்காவில் கடந்த 2001 செப்டம்பர் 11-ல் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களுக்கு முன்பே, ஒசாமா பின்லேடன் இந்தியாவிலும் தாக்குதல் நடத்துவதற்கான திட்டங்களை வைத்திருந்ததாக சி.ஐ.ஏ., ரகசிய ஆவணங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.
9/11-க்கு முன்பே கண்காணிப்பு
அமெரிக்காவின் முன்னாள் அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ் ஆகியோருக்கு வழங்கப்பட்ட உளவுத்துறை அறிக்கைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. 1998 முதல் 2001ம் ஆண்டு வரையிலான இந்த ஆவணங்களில், பின்லேடன் மற்றும் அல்-கொய்தாவின் நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க உளவு அமைப்புகள் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்திருந்தது தெரியவந்துள்ளது.
இந்தியா மீது குறி?
அமெரிக்கா மீதான தாக்குதல்களைத் திட்டமிட்ட பின்லேடன், இந்தியாவையும் தனது தாக்குதல் இலக்குகளில் ஒன்றாகக் கருதியிருந்ததாக ஆவணங்கள் தெரிவிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இந்தியாவில் குறிப்பிட்ட எந்த இடத்தில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது என்பது குறித்த முழுமையான விவரங்கள் தற்போது வெளியாகவில்லை.
பாகிஸ்தான் – தலிபான் தொடர்பு:
இந்த ஆவணங்களில், காந்தஹார் விமானக் கடத்தல் விவகாரம் மற்றும் தலிபான்களுடனான பின்லேடனின் தொடர்புகள் குறித்த அதிர்ச்சித் தகவல்களும் உள்ளன. சவூதி உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியும் கூட, பின்லேடனை வெளியேற்ற தலிபான்கள் மறுத்துவிட்டதும், பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் அல்-கொய்தா தொடர்பில் இருந்ததும் இந்த ஆவணங்கள் வழியாக உறுதியாகியுள்ளது.
எச்சரிக்கைகளை மீறிய தாக்குதல்:
அல்-கொய்தா அமெரிக்காவில் விமானக் கடத்தல் உள்ளிட்ட மிகப்பெரிய தாக்குதல்களை நடத்தக்கூடும் என 1998ம் ஆண்டு முதலே சி.ஐ.ஏ., எச்சரிக்கை விடுத்திருந்தது. 2001ம் ஆண்டு செப்டம்பர் 11ல் நியூயார்க் உலக வர்த்தக மையம் மற்றும் அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுமார் 3,000 பேர் உயிரிழந்தனர்.
தாக்குதலுக்கு முன்பே பல்வேறு எச்சரிக்கைகள் கிடைத்திருந்தும், அவற்றைத் தடுத்து நிறுத்துவதில் அமெரிக்க உளவு அமைப்புகளிடையே ஏற்பட்ட ஒருங்கிணைப்பு குறைபாடுகள் முக்கியப் பங்கு வகித்ததாக ஆவணங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
