திருவனந்தபுரம்: ‘ஏ.ஐ., தொழில்நுட்பம் என்னை மோகன்லால், விஜய்யை விட சிறப்பாக ஆட வைத்து விட்டது,’ என, கேரள முதல்வர் சதீசன் தெரிவித்தார்.
ரஜினி நடிப்பில், அனிருத் இசையமைப்பில் வெளியாக உள்ள ஜெயிலர் 2 திரைப்படத்தின் பாடலான ‘அல்லே போலல்லோ..’ இந்தியா முழுவதும் தெறி ஹிட்டானது. இப்பாடலுக்கு, கேரள முதல்வர் சதீசன் நடனமாடுவது போல வெளியான ஏ.ஐ., வீடியோ, சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதுகுறித்து கோழிக்கோட்டில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் பங்கேற்ற கேரள முதல்வர் சதீசன் கூறியதாவது: சமீபத்தில் என் முகம் மார்பிங் செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட ஏ.ஐ., நடன வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலானது. அதை நான் பார்த்த போது எனக்கே வியப்பாக இருந்தது. நிஜ வாழ்க்கையில் எனக்கு நடனமே ஆட வராது. ஆனால், அந்த வீடியோவில் என்னை மோகன்லால் மற்றும் நடிகர் விஜய்யை விட படுவேகமாகவும், அட்டகாசமாகவும் ஆட வைத்திருக்கிறார்கள்.
அறிவியல் மற்றும் ஏ.ஐ., தொழில்நுட்பம் மனித வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், வளர்ச்சிக்கும் பயன்பட வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக சிலர் இந்த நவீன தொழில்நுட்பத்தை மற்றவர்களை கேலி செய்யவும், தனிநபர் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கவும் தவறாகப் பயன்படுத்துகின்றனர். தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமான பணிகளுக்குப் பயன்படுத்த இளைஞர்கள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
