காவல்நிலையத்தை முற்றுகையிட்டது மற்றும் முதல்வர் விஜய் சாலைவலம் சென்ற போது போராட்டத்தில் ஈடுபட்டது உள்ளிட்ட காரணங்களுக்காக நா.த.க மாநில மகளிர் பாசறைப் பொறுப்பாளர் கார்த்திகா மற்றும் அக்கட்சியைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பியிருந்தது. இந்நிலையில், தவெக அரசின் இந்த கைது நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர். குறிப்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பேராசான் பெ.மணியரசன் உள்ளிட்டோர் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், இந்த கைதை கண்டித்த தலைவர்களுக்கு நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் நன்றி தெரிவித்திருந்தார். இது குறித்து சமூக வலைத்தளப் பக்கத்தில், ”அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு பொய் வழக்கு புனைந்து, தாராபுரம் தொகுதியின் வேட்பாளராகப் போட்டியிட்ட அன்புத்தங்கை கார்த்திகா உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாம் தமிழர் உறவுகளைக் கைது செய்துள்ள தவெக அரசின் எதேச்சதிகாரப்போக்கைக் கண்டித்து ஆதரவுக்குரல் எழுப்பிய,
திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், அதிமுகவின் பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பேராசான் பெ.மணியரசன், திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், தேமுதிகவின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான பிரேமலதா விஜயகாந்த், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான ஜவாஹிருல்லா உள்ளிட்ட அனைவருக்கும் மிக்க நன்றி.
தவறான ஒரு செயல் நடக்கும் பொழுது, அதை எல்லா கட்சிகளையும் கடந்து எல்லோரும் ஒன்றாக முன்னின்று கண்டித்து குரல் எழுப்புவது சனநாயகம் இன்னும் சாகவில்லை என்ற நம்பிக்கையைத் தருகிறது. மக்களாட்சியின் மாண்புகளைக் காலில் போட்டு மிதித்து, அதிகார மமதையுடன் அடக்குமுறைகளை ஏவும் ஆளும் தவெக அரசின் அரசியல் பழிவாங்கலுக்கு எதிராக சனநாயக ஆற்றல்களின் (அனைவரின்) உரத்த குரல் ஒன்றுபட்டு ஓங்கி ஒலிக்கட்டும்!” எனக் குறிப்பிட்டுள்ளார்
