‘உணர்ச்சி உந்துதலில் பேசி விட்டேன்; எனது வார்த்தைகளை வாபஸ் பெறுகிறேன்’: வருத்தம் தெரிவித்து ஆ. ராசா பதிவு

அமைச்சர் நிர்மல் குமாரின் பிறப்பு குறித்து அவதூறாகப் பேசிய தி.மு.க எம்.பி ஆ.ராசாவின் பேச்சு அரசியல் களத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சி.பி.எம் மாநில செயலாளர் பெ.சண்முகம், வி.சி.க அமைச்சர் வன்னி அரசு, முக்குலத்தோர் புலிப்படைத் தலைவர் கருணாஸ் உள்ளிட்ட பலர் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து, “உணர்ச்சி உந்துதலில் பேசிவிட்டேன், எனது வார்த்தைகளைத் திரும்பப் பெறுகிறேன்” என்று ஆ.ராசா தனது எக்ஸ் தளத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மிசா காலத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டது சிறையில் கொடுமைக்குள்ளானது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் விஜய் தாடையை உயர்த்தி சைகை செய்து பேசியது சர்ச்சையான நிலையில், விஜயைக் கண்டித்து தி.மு.க சார்பில் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் சனிக்கிழமை (12.09.2026) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தி.மு.க சார்பில் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பேசிய தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா கைது குறித்து பேசிய முதலமைச்சர் விஜய், அமைச்சர் நிர்மல் குமாரை கடுமையாக விமர்சித்துப் பேசினார். 

தி.மு.க ஆட்சிக் காலத்தி பிரசாரம் செய்த விஜய், எங்கேயாவது நடந்த குற்றங்களை சட்டம் ஒழுங்கு பிரச்னையாகக் கூறினார் சி.எம். சார் என்று கேள்வி எழுப்பினார். அதுவே விஜய் முதலமைச்சராக இருக்கும்போது, த.வெ.க கொலை, ஆணவக் கொலை நடக்கும்போது சட்டம் ஒழுங்கு பிரச்னை என்று கேள்வி கேட்டால், அதற்கு தனிப்பட்ட குற்றங்கள் என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்னை இல்லை என்றும் கூறுகிறார். இப்படி பேசுபவர்கள் தற்குறியா? விவரங்கெட்டவனா என்று கேள்வி எழுப்பி கடுமையான வார்த்தைகளில் தாக்கிப் பேசினார். 

தமிழக முதல்வர் விஜய் குறித்தும், அமைச்சர் நிர்மல்குமார் குறித்தும் அவர் ஒருமையில் மற்றும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரம், தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அநாகரிக பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

அமைச்சர் நிர்மல் குமார் சட்டப்பேரவையில் பேசும்போது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை, பெண்கள் அவதூறு விஷயத்தில் கைது செய்யப்பட்டார் என்று பேசியதற்கு கடும் கண்டனம் தெரிவித்த ஆ.ராசா, “சிறைக்கு அவர் அதற்கு போனார், இதற்கு போனார் என்று சொல்கிறார்கள். எனக்குகூட சந்தேகம் இருக்கிறது. நீ யாருக்கு பொறந்தனு சந்தேகம் இருக்கு” என்று கடுமையாகத் தாக்கிப் பேசினார்.

அமைச்சர் நிர்மல் குமார் பிறப்பு குறித்து அவதூறாகப் பேசிய ஆ.ராசாவின் பேச்சும் பெரும் சர்ச்சையான நிலையில், சி.பி.எம் மாநில செயலாளர் பெ.சண்முகம், வி.சி.க அமைச்சர் வன்னி அரசு, கருணாஸ் உள்ளிட்ட பலரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், “உணர்ச்சி உந்துதலில் பேசி விட்டேன்; எனது வார்த்தைகளை வாபஸ் பெறுகிறேன்” என்று தனது பேச்சுக்கு ஆ.ராசா வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆ.ராசா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ – உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு  உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த  ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்; என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

Source link