உலகளவில் திருக்குறளுக்குக் பெருமை சேர்க்கும் பிரதமரின் நடவடிக்கைகளுக்கு வைரமுத்து வாழ்த்து தெரிவித்தார்.
தாம்பரத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, சர்வதேச அரங்கிலும் பிற நாட்டுத் தலைவர்களுடனான சந்திப்புகளின்போதும் திருக்குறளின் சிறப்புகளைப் பிரதமர் மோடி தொடர்ந்து உலகறியச் செய்து வருவதைப் பாராட்டினார்.
டெல்லி வந்து பாராட்டுவோம்
ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடனான சந்திப்பின் போது திருக்குறளின் ரஷிய மொழிபெயர்ப்பு புத்தகத்தைப் பிரதமர் மோடி பரிசளித்த நிகழ்வை வைரமுத்து நினைவு கூர்ந்தார். உலகளவில் திருக்குறளுக்குக் பெருமை சேர்க்கும் பிரதமரின் நடவடிக்கைகளுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். இந்த நிகழ்வைக் குறிப்பிட்டுப் பேசிய வைரமுத்து, ஒரு மதத்தைச் சார்ந்த குரானையோ அல்லது பகவத் கீதையையோ வழங்காமல் திருக்குறளைப் பிரதமர் வழங்கிய காரணம், அது எந்தவொரு குறிப்பிட்ட சாதி, மதம் அல்லது மொழியைக் கடந்து மனிதகுலம் முழுமைக்கும் பொதுவான தத்துவங்களை எடுத்துரைப்பதே ஆகும் என்று பாராட்டினார்.
தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்
உலக அரங்கில் திருக்குறளின் பெருமையை உயர்த்திப் பிடிக்கும் பிரதமருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்த வைரமுத்து, திருக்குறளை இந்தியாவின் ‘தேசிய நூல்’ என அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறு அறிவிக்கப்படும் பட்சத்தில் மதுரை மல்லிகைப் பூவோடும், சேலத்து மாம்பழக் கூடையோடும் டெல்லிக்கு நேரில் வந்து பிரதமரை வியந்து பாராட்டுவோம் என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தேசிய அந்தஸ்து
திருக்குறள் மதச்சார்பற்ற பண்பையும், உலகளாவிய மானுட மதிப்புகளையும் கொண்டுள்ளதால், அதற்குத் தேசிய நூல் அந்தஸ்து வழங்குவது தமிழ் மொழிக்கும், ஒட்டுமொத்த இந்திய கலாச்சாரத்திற்கும் உலகளவில் மிகப்பெரிய பெருமையைச் சேர்க்கும் என அவர் வலியுறுத்தினார்.
