மும்பை : ” மஹாராஷ்டிரா உணவு பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டேயின் அதிரடி நடவடிக்கைகள் உணவுப் பாதுகாப்புத் துறையின் முக்கியத்துவம் மற்றும் மாநிலங்களில் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆணையர்களின் பங்கு குறித்து பொது மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவி உள்ளது,” என இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய (எப்எஸ்எஸ்ஏஐ) தலைவர் ரஜித் பன்ஹானி கூறியுள்ளார்.
மஹாராஷ்டிரா மாநில உணவு பாதுகாப்பு கமிஷனராக சமீபத்தில் துக்காராம் முண்டே பதவியேற்றார். கடந்த 21 ஆண்டு கால பணிக்காலத்தில் 25 டிரான்ஸ்பர்களை சந்தித்த இவர், அரசியல்வாதிகளை மிரள விட்டவர். தற்போது உணவு பாதுகாப்பு துறையிலும் அதிரடியை துவக்கி உள்ளார். தினமும், பிரபலங்கள் அல்லது சாமானியர்கள் என பாரபட்சம் பார்க்காமல் தவறு செய்யும் உணவகங்கள், உணவுப்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகிறார். லைசென்ஸ் இல்லாத உணவகங்களை சீல் வைத்து வருகிறார். அவரது நடவடிக்கைகள் நாடு முழுவதும் பலரின் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் சிஇஓ ரஜித் புன்ஹானி அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளதாவது: மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்ற கூற்றுக்கு துக்கராம் முண்டேயின் செயல்கள் ஒரு சான்றாக அமைந்து உள்ளன. உணவுப் பாதுகாப்புத் துறைக்கு வரலாற்று ரீதியாக உரிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இந்தத் துறையின் பொறுப்பை ஏற்க பல அதிகாரிகள் தயக்கம் காட்டி வந்தனர். இப்பதவியில் இருப்பதை பலர் தண்டனையாக கருதினர். பல அதிகாரிகள் உணவு பாதுகாப்பு கமிஷனர் ஆக விரும்பியது இல்லை.
தண்டனைக்குரிய பதவி என கருதியது ஏன்
இந்தத் துறையில் யாரும் கவனம் செலுத்தவில்லை. சுகாதாரத்துறையில் டாக்டர்கள், ஆரம்ப சுகாதார மையங்கள் உள்ளன. ஒரு பழமையான அமைப்பு உள்ளது. அது 100 ஆண்டு பழமையான அமைப்பாகக் கூட இருக்கலாம். ஒப்பீட்டு அளவில் உணவு பாதுகாப்புத்துறை புதியது என்றாலும், மக்களுக்கு அதனைப்பற்றித் தெரியவில்லை. பல அதிகாரிகளுக்கு இப்பொறுப்பு கூடுதலாக ஒப்படைக்கப்பட்டது. முக்கியமான பொறுப்பு என கருதியிருந்தால், ஒருவரிடம் கூடுதலாக கொடுத்து இருக்க மாட்டார்கள். தனியாக உணவு பாதுகாப்பு கமிஷனரை நியமனம் செய்து இருப்பார்கள்.
ஒவ்வொரு மாநிலத்திலும் முக்கியம்
ஒவ்வொரு மாநிலத்திலும், ஒரு பிரத்யேக உணவு பாதுகாப்பு கமிஷனர் இருப்பதன் அவசியம் என கருதப்பட வேண்டும். அது இப்போது கட்டாயம். மஹாராஷ்டிராவில் துக்காராம் முண்டேயின் பணியில் மகிழ்ச்சி அடைகிறேன். அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்காமல் தனது பணியை செய்து முடித்தார்.
துக்காராம் முண்டேயின் அதிரடி நடவடிக்கைகள் உணவுப் பாதுகாப்புத் துறையின் முக்கியத்துவம் மற்றும் மாநிலங்களில் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆணையர்களின் பங்கு குறித்து பொது மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்த உதவி உள்ளது. இவ்வாறு ரஜித் புன்ஹானி கூறினார்.
