Written by: Vidheesha Kuntamalla
உத்தரகாண்ட் மாநிலத்தில் நடந்து வரும் வாக்காளர் பட்டியலின் சிறப்பு தீவிர திருத்தத்தின் கீழ், உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனை தீர்ப்பதற்கான காலக்கெடுவை தேர்தல் ஆணையம் மேலும் 17 நாட்களுக்கு நீட்டித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, முன்னதாக செப்.15 அன்று வெளியிடப்பட இருந்த இறுதி வாக்காளர் பட்டியல், தற்போது அக்டோபர் 3 அன்று வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர்களைச் சேர்க்க, நீக்க அல்லது திருத்த தேர்தல் ஆணையத்திடம் பொதுமக்கள் முறையிடுவதற்கான உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் காலத்தில், பெயர்களை நீக்கக் கோரி 1.3 லட்சத்துக்கும் மேற்பட்ட ‘படிவம்-7’ விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அணுகிய அதிகாரப்பூர்வ தகவல் தெரிவிக்கின்றன. கடந்த ஜூலை 14 அன்று தொடங்கிய இந்தக் காலக்கெடு செப்.9-ம் தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது செப்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து உத்தரகாண்ட் மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி பி.வி.ஆர்.சி. புருஷோத்தம் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையில், உத்தரகாண்ட் வாக்காளர் பட்டியலின் இறுதி வெளியீட்டுக்கான புதிய தேதியாக அக்.3-ஐ தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ளது. நிலுவையில் உள்ள உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபனைகளைத் தீர்த்து முடிக்க இந்த கூடுதல் அவகாசம் பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.
மாநிலம் முழுவதும் பெறப்பட்ட 1,30,382 படிவம்-7 விண்ணப்பங்களில், உதம் சிங் நகர் மாவட்டத்தில் மட்டும் 43,878 மனுக்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து ஹரித்வாரில் 29,369, டேராடூனில் 19,402 மற்றும் நைனிடாலில் 18,301 விண்ணப்பங்கள் வந்துள்ளன. மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில், இந்த 4 மாவட்டங்கள் மட்டுமே உரிமை கோரல் காலத்தில் பெறப்பட்ட மொத்த படிவம்-7 விண்ணப்பங்களில் 85%-க்கும் அதிகமான பங்கைக் கொண்டுள்ளன.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
ஏற்கனவே லட்சக்கணக்கான வாக்காளர் பதிவுகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்ட பெரிய அளவிலான திருத்தப் பணிகளின் பின்னணியில் இந்த நீக்கல் கோரிக்கைகள் குவிந்துள்ளன. ஜூலை 14 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியானபோது, அதில் 71.33 லட்சம் வாக்காளர்கள் மட்டுமே இடம்பெற்றிருந்தனர். இது 2022 சட்டப்பேரவைத் தேர்தலின் இறுதிப் பட்டியலில் இருந்த 79.58 லட்சம் வாக்காளர்களை விட சுமார் 8.25 லட்சம் குறைவாகும். மேலும், அந்த வரைவுப் பட்டியலில் 19.04 லட்சம் வாக்காளர் பதிவுகளில் முரண்பாடுகள் இருப்பதாக குறிக்கப்பட்டிருந்தது; இதில் டேராடூன், ஹரித்வார் மற்றும் உதம் சிங் நகர் மாவட்டங்களில்தான் அதிகபட்ச முரண்பாடுகள் பதிவாகியிருந்தன.
முன்னதாக, வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணியின்போது, தேர்தல் ஆணையம் 8.32 லட்சம் வாக்காளர்களை ‘ASD’ பிரிவின் கீழ் (Absent – இல்லாதவர்கள், Shifted – இடம் பெயர்ந்தவர்கள், Dead – இறந்தவர்கள்) அடையாளம் கண்டது. தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டு விடக் கூடாது என்பதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், இத்தகைய வழக்குகளில் மீண்டும் வாக்குச்சாவடி அளவிலான சரிபார்ப்பை மேற்கொள்ள தலைமைத் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளதாகவும் புருஷோத்தம் தெரிவித்தார்.
இந்த தீவிர சரிபார்ப்புப் பணி தற்போது பெரும் பணிச்சுமையாக மாறியுள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் திங்கள்கிழமை புள்ளிவிவரங்களின்படி, ஜூலை 14 முதல் ஆகஸ்ட் 13 வரை மாநிலம் முழுவதும் பெறப்பட்ட 1,30,382 படிவம்-7 விண்ணப்பங்களில் 44,132 மட்டுமே தீர்க்கப்பட்டு, 86,250 விண்ணப்பங்கள் பரிசீலனையில் நிலுவையில் உள்ளன.
நீக்கல் கோரிக்கைகள் அதிகமுள்ள மாவட்டங்களிலேயே நிலுவையும் அதிகமாக உள்ளது. உதம் சிங் நகரில் 34,903 படிவம்-7 விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன; ஹரித்வாரில் 17,554, நைனிடாலில் 11,498 மற்றும் டேராடூனில் 11,262 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. மாநிலத்தின் மொத்த படிவம்-7 விண்ணப்பங்களில் உதம் சிங் நகர் மட்டுமே சுமார் 34% பங்கைக் கொண்டுள்ளது; இங்கு பெறப்பட்ட 43,878 விண்ணப்பங்களில் செப்டம்பர் 7 வரை 8,975 மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளன. ஹரித்வாரில் 29,369-ல் 11,815 விண்ணப்பங்களும், நைனிடாலில் 18,301-ல் 6,803 விண்ணப்பங்களும், டேராடூனில் 19,402-ல் 8,140 விண்ணப்பங்களும் மட்டுமே தீர்க்கப்பட்டுள்ளன.
படிவம்-7 மூலம் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட உடனேயே ஒரு பெயர் தானாகவே நீக்கப்பட்டுவிடாது. வாக்குப்பதிவுப் பதிவு அதிகாரி (ERO) உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட வாக்காளருக்கு விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கி பின்னரே உத்தரவு பிறப்பிக்க வேண்டும். வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் (BLO) கள ஆய்வை மேற்கொள்ள வேண்டியது கட்டாயமாகும்.
கடந்த ஜூலை மாத வரைவுப் பட்டியலில் ‘இதர’ (others) பிரிவில் 69,231 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருந்தனர்; கணக்கெடுப்பு படிவங்களைச் சமர்ப்பிக்கவோ அல்லது கையொப்பமிடவோ மறுத்தவர்களே அவர்கள் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்திருந்தார். வரைவுப் பட்டியலில் விடுபட்ட உண்மையான தகுதியுள்ள வாக்காளர்கள் இந்த ஆட்சேபனை காலத்தில் தங்களை இணைத்துக் கொள்ளலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது.
இதனிடையே, மொத்தம் உள்ள 71,33,785 வாக்காளர்களுக்கு எதிராக SIR-ன் கீழ் அனுப்பப்பட்ட 24,30,387 நோட்டீஸ்களில், செப்.7 நிலவரப்படி 24,29,524 நோட்டீஸ்களுக்கு (99.96%) விசாரணைகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. அனுப்பப்பட்ட நோட்டீஸ்களில் கிட்டத்தட்ட அனைத்து விசாரணைகளும் முடிந்துவிட்டதாகக் கூறப்பட்டாலும், பெயர்களை நீக்கக் கோரும் 86,250 படிவம்-7 விண்ணப்பங்கள், புதிய பெயர்களைச் சேர்க்கக் கோரும் 1,14,579 படிவம்-6 விண்ணப்பங்கள் மற்றும் திருத்தங்கள் கோரும் 38,241 படிவம்-8 விண்ணப்பங்கள் என இன்னும் பெருமளவிலான கோரிக்கைகள் நிலுவையில் உள்ளன.
