பிரிக்ஸ் உச்சி மாநாடு: சீனாவிடம் தொழில்நுட்ப இறக்குமதி, முதலீட்டுக் கட்டுப்பாடுகள் குறித்து பேச இந்தியா திட்டம்

Written by: Ravi Dutta MishraPratyush Deep

புதுடெல்லியில் செப்.12–13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள 18-வது பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாட்டிற்கு முன்னதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் இந்திய தொழில்துறை கூட்டமைப்புகளுடன் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. சீன அதிபர் ஜி ஜின் பிங் பெருமளவிலான வணிகக் குழுவினருடன் இந்த மாநாட்டில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் இடையே நடைபெறவுள்ள உயர்மட்டப் பேச்சுவார்த்தைகளின் போது, சீனாவில் இயங்கும் இந்திய நிறுவனங்கள் எதிர்கொள்ளும் முதலீட்டு கட்டுப்பாடுகள் மற்றும் சீனாவிலிருந்து உயர்தொழில்நுட்பப் பொருட்களை இறக்குமதி செய்வதில் அந்நாட்டு சுங்கத் துறை ஏற்படுத்தும் தடைகள் குறித்த தனது கவலைகளை இந்திய தரப்பு எழுப்பக்கூடும் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டு உள்ளது.

சீன சுங்கத்துறையால் முக்கிய தொழில்நுட்பப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இந்திய உற்பத்தித் துறையைப் பாதித்து வருவது குறித்து, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் ‘சீனா பிரிவு’ (China desk) விரிவாக ஆய்வு செய்து வருவதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சீனாவில் இருந்து அரிய வகை காந்தங்கள் (rare earth magnets) ஏற்றுமதி செய்யப்படுவதில் ஏற்பட்ட தாமதத்தால் இந்திய ஆட்டோமொபைல் துறை ஏற்கனவே மாற்று வழிகளைத் தேடி வருகிறது. இதனால், விதிமுறைகளைத் தளர்த்துவதிலும், மூலப்பொருட்களைப் பெறுவதற்கான கட்டுப்பாடுகளை நீக்குவதிலும் இருதரப்புக்கும் பரஸ்பர சலுகைகளை வழங்க வேண்டும் என இந்திய தரப்பு வலியுறுத்த வாய்ப்புள்ளது.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

சீனாவில் மூலப்பொருள் ஆதாரங்களைக் கொண்டுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவிக்கையில், முக்கியமான தொழில்நுட்பங்கள் மற்றும் மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு சீனா விதித்து வரும் கட்டுப்பாடுகள் குறித்து பேசுவது, வரவிருக்கும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய அரசுக்கு மிக முக்கியமான முன்னுரிமையாக மாறியுள்ளது என்றார்.

இங்காட் மற்றும் வேஃபர் (ingot and wafer) தொழில்நுட்பம், பேட்டரி செல்கள் மற்றும் செல் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் ஏற்றுமதிக்கு சீனா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உதாரணமாக, மின் பரிமாற்றத் துறையில், உயர் மின்னழுத்த நேரடி மின்னோட்டம் (HVDC) மற்றும் சிறப்பு உபகரணங்களின் ஏற்றுமதியும் கட்டுப்படுத்தப்படுகிறது என்று அவர் கூறினார். நீண்ட தூர மின் பரிமாற்றத்தின்போது மின் இழப்பைக் குறைப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஒருங்கிணைத்து மின் கட்டமைப்பு ஸ்திரத்தன்மையை (grid stability) உறுதி செய்வதற்கும் HVDC தொழில்நுட்பம் மிக இன்றியமையாததாகும்.

இத்தகைய கட்டுப்பாடுகள் உள்நாட்டு உற்பத்தித் திறனை வளர்க்கும் இந்தியாவின் முயற்சிகளைப் பாதிக்கக்கூடும் என்று அந்த நிர்வாகி எச்சரித்தார். கடந்த 12 முதல் 15 மாதங்களில் பெரும்பாலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். ஸ்டெர்லைட் எலக்ட்ரிக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், செரெண்டிகா ரினியூவபிள்ஸ் மற்றும் ரெசோனியா நிறுவனங்களின் தலைவருமான பிரதீக் அகர்வால் கூறுகையில், எச்.வி.டி.சி உள்ளிட்ட நவீன மின் பரிமாற்ற அமைப்புகளுக்கு தேவையான முக்கிய தொழில்நுட்பங்கள் மற்றும் பிரத்யேக உபகரணங்களின் ஏற்றுமதிக்கு சீனா விதிக்கும் கட்டுப்பாடுகள், உலகளாவிய விநியோகச் சங்கிலியின் பலவீனங்களை வெளிப்படுத்துகின்றன. அதிகரித்து வரும் மின் தேவை மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இணைக்க உலகின் மிகப்பெரிய மின் கட்டமைப்பு விரிவாக்கத்தை மேற்கொண்டு வரும் இந்தியாவிற்கு இது மிகவும் முக்கியமானதாகும் என்றார்.

இருப்பினும், சமீபத்திய மாதங்களில் இந்தியாவிடமிருந்து சீனா இறக்குமதியை அதிகரித்துள்ளதாக அதிகாரப்பூர்வ வர்த்தக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்தியாவுக்கான சீனாவின் ஏற்றுமதி 28%-க்கும் அதிகமாக உயர்ந்து 5.55 பில்லியன் டாலராகப் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் வரிகளால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் கடல் உணவு ஏற்றுமதிக்கு, சீனாவுடனான இந்த வர்த்தக வளர்ச்சி பெரிதும் கைகொடுத்துள்ளது.

எல்லைப் பகிர்வு நாடுகளுக்கான அந்நிய நேரடி முதலீட்டு (FDI) விதிகள் தளர்வு, நாது லா வழியாக இந்தியா-சீனா எல்லை வர்த்தகம் மீண்டும் தொடங்குதல், நேரடி விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்படுவது என சமீப காலமாக இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தக உறவில் கணிசமான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக வர்த்தக அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் இந்த வாரம் பெய்ஜிங் செல்லவிருந்த நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் எல்லைப் பேச்சுவார்த்தைகள் காரணமாக அப்பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவிற்கான சீனத் தூதர் சூ ஃபெய்ஹாங், செப்.1 அன்று மத்திய வர்த்தகச் செயலாளர் ராஜேஷ் அகர்வாலைச் சந்தித்துப் பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இருநாட்டுத் தலைவர்களின் வழிகாட்டுதலின் கீழ், நேரடி விமான சேவை மற்றும் எல்லை வர்த்தகம் மீண்டும் தொடங்கியதன் மூலம் இருதரப்பு உறவு நல்ல முன்னேற்றப் பாதையில் செல்வதாக தூதரகம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் மாதம் கேமரூனில் நடந்த 14-வது உலக வர்த்தக அமைப்பின் (WTO) மாநாட்டின் இடையே வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல், தனது சீன இணையமைச்சர் வாங் வெண்டாவோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அமெரிக்க வரி நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில், இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான பி.எச்.இ.எல் (BHEL), சீனாவிலிருந்து 21 அத்தியாவசியப் பொருட்களை 5 ஆண்டுகளுக்குக் கொள்முதல் செய்ய கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு அனுமதி அளித்தது. தொடர்ந்து ஜூன் மாதத்தில், இந்தியாவில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டுள்ள டி.பி.இ.ஏ எனர்ஜி, நாஞ்சிங் எலக்ட்ரிக் இந்தியா, நியூ நார்த்ஈஸ்ட் எலக்ட்ரிக் இந்தியா, டைகாய் எலக்ட்ரிக் (இந்தியா) ஆகிய 4 சீன மின் உற்பத்தி நிறுவனங்கள் அரசு டெண்டர்களில் பங்கேற்க மத்திய நிதி அமைச்சகம் தளர்வு அளித்தது.

2020-ம் ஆண்டு கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பிறகு அண்டை நாட்டு நிறுவனங்களுக்கு அரசியல் மற்றும் பாதுகாப்பு அனுமதிகள் கட்டாயமாக்கப்பட்டிருந்தன. அந்த கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, குறிப்பிட்ட சீன உற்பத்தி நிறுவனங்களுக்கு அண்மையில் அனுமதிகள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link