எமர்ஜென்சியை எதிர்த்து ஆட்சியையே இழந்த வரலாறு தி.மு.க-வுக்கு உண்டு என்றும், தங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை, உண்மையான வரலாறே இருக்கிறது என்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) விமர்சனங்களுக்கு தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா திருச்சி விமான நிலையத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.
தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா, திருச்சி விமான நிலையத்தில்வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது; வரலாற்றை சரியாகத் தெரிந்து கொள்ளாமல் முதலமைச்சரும் அவருடைய சகாக்களும் மிசாவில் ஸ்டாலின் கைதாகவில்லை என பேசுகிறார்கள். எங்கள் தலைவர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டால் பிம்பம் உடைந்து விட்டதால் வீடியோ வெளியிடுவதாக விமர்சனம் செய்கிறார்கள்.
எங்களுக்கு எந்த பிம்பமும் உடையவில்லை, எங்களுக்கு இருப்பது உண்மையான உருவமும், உண்மையான வரலாறுமே. எமர்ஜென்சியை எதிர்த்ததால் தி.மு.க ஆட்சியையே இழந்தது. அப்போது இன்றைய முதல்வருக்கு வயது ஒன்று.
சுதந்திரப் போராட்டத்தை நாம் பார்த்தது கிடையாது. ஆனால் அதில் பங்கேற்ற வீரர்கள் குறித்து நாம் தொடர்ந்து பேசுகிறோம். அதேபோல தான், எமர்ஜென்சி காலகட்டம் ஜனநாயகத்தைக் காக்கும் போராட்டமாக இருந்தது.
எமர்ஜென்சி குறித்து பதட்டப்பட்டு நாங்கள் பேசவில்லை. த.வெ.க-வினர் பாணியிலும் நாங்கள் பேச விரும்பவில்லை. அது எங்களுக்கு பழக்கமும் கிடையாது. ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் வந்து விட்டோம் என்கிற ஒரே காரணத்திற்காக வரலாற்றில் இடம் பெற்ற தலைவர்களை கொச்சைப்படுத்துவது நாகரீகம் ஆகாது.
எமர்ஜென்சி குறித்து மீண்டும் மக்களிடம் பேசுவதற்கான வாய்ப்பை த.வெ.க எங்களுக்கு தந்ததற்கு அவர்களுக்கு நன்றி தான் கூற முடியும். எமர்ஜென்சி காலகட்டத்தில் இந்தியாவில் ஜனநாயகம் பாதிக்கப்பட்டது என்பது குறித்து இன்றைய இளம் தலைமுறை தெரிந்து கொள்வதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு.
கொள்கைக்காக எமர்ஜென்சியை எதிர்த்து ஆட்சியை இழந்தது தி.மு.க. பதவிக்காக அதிகாரத்திற்காக எதையும் செய்யலாம் என்கிற அரசியல் உலகில் கொள்கைக்காக ஜனநாயகத்தைக் காக்க பெரும்பான்மை பலத்தோடு இருந்த தங்களது ஆட்சியை இழந்தது தி.மு.க. எங்களை விமர்சிப்பவர்கள் அந்த வரலாற்று பக்கங்களை முதலில் படிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
செய்தி: க.சண்முகவடிவேல் – திருச்சி
