எங்கள் முன் அனைவரும் சமம்: ராகுல் மீதான அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து

புதுடில்லி: ” எங்கள் முன் அனைவரும் சமம்,” என காங்கிரஸ் எம்பி ராகுல் தொடர்பான அவதூறு வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் எம்பி ராகுல் கடந்த 2022ம் ஆண்டு பாரத்ஜோடோ யாத்திரை மேற்கொண்டார். அப்போது 2022 டிச.,16ல் நிருபர்களிடம் பேசிய ராகுல், எல்லையில் 2 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலத்தை சீனா ஆக்கிரமித்துள்ளது என்றும், அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா சீனா ராணுவம் இடையே மோதல் ஏற்பட்டது எனவும் கூறினார்.

.ராகுலின் விமர்சனம் தொடர்பாக எல்லை சாலைகள் அமைப்பின் ( பிஆர்ஓ) முன்னாள் இயக்குனர் உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா லக்னோவில் உள்ள எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், இந்திய ராணுவத்தை அவமதிக்கும் வகையில் ராகுல் பேசி வருவதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கில் ராகுல், லக்னோ நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றார். இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இனால், உச்சநீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்துள்ளார்.

இதனை நீதிபதிகள் தீபங்கர் தத்தா, அகஸ்டின் ஜார்ஜ் மசி அமர்வு விசாரித்து வருகிறது.

இந்நிலையில் தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பக்ஷி, மோகனா அமர்வு முன்பு ஆஜரான உதய் சங்கர் ஸ்ரீவஸ்தவா வழக்கறிஞர் கவுரவ் பாட்டியா, ராகுலின் மேல்முறையீட்டு மனுவை நீதித்துறை விசாரணைக்கு பட்டியலிடப்படவில்லை எனத் தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில், ராகுல் விவிஐபி கிடையாது. ஐந்து மாதங்களுக்கு முன்பு மேல்முறையீடு பட்டியலிடப்பட்டது. ஆனால், விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இது நீதிமன்றத்திற்கு நல்ல பெயர் இல்லை எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதிகள் கூறுகையில், நடைமுறைகளை பின்பற்றுவோம். எங்கள் முன் அனைவரும் சமம். தயவு செய்து, விரைவாக விசாரிப்பதற்கு மனு தாக்கல் செய்யுங்கள். நாங்கள் அதனை எடுத்துக் கொள்வோம் எனத் தெரிவித்தனர்.

Source link