காத்மாண்டு: உலகின் எந்த நாட்டிடம் இருந்து நேரடியாக எந்தவித நிதி இழப்பீட்டையும் நேபாளம் கோரவில்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கனால் விளக்கம் அளித்துள்ளார்.
பெருவெள்ளத்தில் பெருத்த சேதத்தை சந்தித்த நேபாளம், சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளிடம் காலநிலை தொடர்பான பேரிடர் இழப்பீட்டை கோரியதாக செய்திகள் வெளியாகின. இதை நேபாளம் தற்போது திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இதுகுறித்து நேபாள வெளியுறவு அமைச்சர் ஷிசிர் கனால் அளித்துள்ள விளக்கம் வருமாறு;
நானோ, வெளியுறவு அமைச்சகமோ எந்த உலக நாட்டிடம் இருந்தும் காலநிலை இழப்பீடு தொடர்பான எந்த கோரிக்கையையும் வைக்கவில்லை. இந்தியா, சீனா, அமெரிக்கா உள்பட எந்த நாடுகளிடமோ நேரிடையாக இழப்பீடு கேட்கவில்லை.
இந்த பேரிடரை காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் என்ற கண்ணோட்டத்தில் அனைவரும் பார்க்கவேண்டும். இதுவே எங்களின் கோரிக்கை. அனைவரும் கூட்டு ஒத்துழைப்பை தர வேண்டும்.
ஒவ்வொரு முறையும் பேரிடர் நிகழும்போது, அதிகரித்து வரும் வெப்பநிலை, காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் போன்றவை குறித்து சிந்திக்க வேண்டும். எங்களின் நாகரிகம், கலாசாரம், எதிர்காலம் ஆகியவற்றை காப்பாற்ற ஒத்துழைக்க தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு ஷிசிர் கனால் கூறினார்.
