குவைத்திற்கு வீட்டு வேலைக்குச் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தான் ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாகவும், தன்னை எப்படியாவது காப்பாற்றுங்கள் எனவும் உருக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில், ”என் பெயர் வனிதா. நான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவள். இங்கு வந்து மூன்று மாதங்கள் ஆகின்றன. என்னை அடைத்துவைத்து சித்ரவதை செய்கிறார்கள். இரண்டு மாதமாக எனக்குச் சம்பளமும் தரவில்லை. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மேடம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் தான் என்னை மீட்டு, என் தாய்நாடான இந்தியாவிற்குத் திரும்ப அழைத்துச் செல்ல வேண்டும்” எனக் கண்ணீருடன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, வனிதாவின் தாயார் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளரிடம் இது குறித்து புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையில் வனிதா (35) கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, அந்த ஏஜண்ட் மீது வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட மாநில மற்றும் ஒன்றிய அரசின் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக, தற்போது வனிதா பத்திரமாக மீட்கப்பட்டு, இந்தியத் தூதரகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.
