செல்ஃபி பட இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘மண்டாடி’. எல்ரெட் குமார் தயாரித்து வழங்கும் இப்படத்தை வெற்றிமாறன் படைப்பாக்க தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்திருக்க தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாகவும் சத்​ய​ராஜ், ரவீந்​திரா விஜய், அச்​யுத் குமார் உள்ளிட்டோர் முக்​கிய கதா​பாத்​திரங்​களிலும் நடித்துள்ளனர்.
இப்படம் கடலில் நடக்கும் படகு போட்டியை மைய்யமாகக் கொண்டு உருவாகியுள்ளது. செப்டம்பர் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடந்தது. அதில் கலந்து கொண்ட அனைவரும் படத்தை வெகுவாக பாராட்டினர்.
இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் சத்யராஜ் குரலில் ‘இந்த கடல் எவ்ளோ பெருசோ அதுல இருக்கிற ஆபத்துங்க அதை விட பெருசு’ என ஆரம்பிக்கிறது. பின்பு படகு போட்டி காட்சிகள் வர ‘சிங்கங்கள் இல்லாத காட்டை ஓநாய் கூட்டம் அரச ஆளுறக் கதையா நீ போன 20 வருஷத்துல பாமர பந்தையம் சாட்டா புலி கட்டுக்குள்ள போயிடுச்சுயா’ என்ற பின்னணி வசனத்துடன் வில்லன் சுஹாஸ் எண்ட்ரி கொடுக்கிறார்.
தொடர்ந்து ‘இந்த ஊரோட படகு பந்தய டீம்னா அது சுனாமி ரைடர்ஸ் மட்டும் தான், எவன் வந்தாலும் அதை தடுக்க முடியாது’ என சுஹாஸ் சபதம் எடுக்க உடனே ஹீரோ சூரி எண்ட்ரி கொடுக்கிறார். ‘லோக்கல் பிளேயர்ஸ் இல்லனா அது எப்படி ஊருக்கான டீமா இருக்கும், இவனுங்களுக்கு நான் டிரெய்னிங் கொடுத்து ஜெயிச்சு தரேன்’ என மிதுன் ஜெய் சங்கர் அடங்கிய டீமை வழிநடத்துகிறார். இதனால் கடுமையான பயிற்சியை அவர்களுக்கு கொடுக்கிறார். அதில் உயிரிழப்பு ஏற்படும் அளவிற்குபாதிப்பு நடக்கிறது. பின்பு அந்த டீமில் இருக்கும் மிதுன் மற்றும் ஊர் மக்கள் சிலர் சூரிக்கு எதிராக மாற அதையெல்லாம் தாண்டி போட்டியில் அந்த டீம் ஜெயித்ததா இல்லையா, சூரிக்கும் சுஹாஸுக்கும் என்ன பகை, சத்யராஜ் இவர்களுக்கு யார் என்ற பல்வேறு கேள்விகளுடன் டிரெய்லர் அமைந்திருக்கிறது. மேலும் சத்யராஜ், ‘பந்தயமுங்குறது யார் பெரிய தாட்டியக்காரன்னு நடக்குற போட்டியில்ல காளி, பந்தயம்ங்குறது அறிவு’ என பேசும் வசனம், சூரி பீடி குடிக்கும் ஸ்டைல் மற்றும் படகு போட்டியின் காட்சிகள் டிரெய்லரின் சிறப்பம்சமாக அமைந்திருக்கிறது.
