சென்னை: தவெகவுக்கு ஆதரவளித்த கம்யூனிஸ்ட் கட்சிகள், இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்திருக்கின்றன. ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகளின் முடிவுகளை ஒட்டியே முடிவெடுப்போம் என்று அறிவித்திருந்த திருமாவளவன், இடைத்தேர்தல் குறித்து என்ன முடிவெடுக்கப்போகிறார்? என்று பலரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தவெக பெரும்பான்மையை பெற்ற நிலையில், திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐயுஎம்எல் மற்றும் விசிக ஆகியவை தவெகவுக்கு ஆதரவு கொடுத்து விஜய்யை முதலமைச்சராக்கின. இதற்கு கைமாறாக கம்யூனிஸ்ட் கட்சிகளை தவிர மற்ற கட்சிகளை சேர்ந்த எம்எல்ஏக்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிகள் அமைச்சரவையில் இடம் பெற மறுத்துவிட்டன.
நிலைமை இப்படி இருக்கையில், சில அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இதன் காரணமாக தற்போது 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த தொகுதிகளில் தவெகவில் இணைந்த எம்எல்ஏக்களுக்கே மீண்டும் வாய்ப்பை வழங்கியிருக்கிறார் முதலமைச்சர் விஜய். இந்த வேட்பாளர்களுக்கு தவெகவின் கூட்டணி கட்சிகள் ஆதரவு கொடுக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகள் தனி நிலைப்பாடு எடுத்தன.
தவெகவுக்கு ஆதரவளிக்காமல் தனித்து போட்டியிடுவது என்பதுதான் அந்த நிலைப்பாடு. அதன்படி இரண்டு தொகுதிகளிலும் ஆளுக்கு ஒரு தொகுதிகளில் சிபிஐ மற்றும் சிபிஎம் போட்டியிடுவதாக முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. இது விஜய்க்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இது ஒருபுறம் இருக்கையில், மறுபும் விசிகவின் நிலைபாடு என்ன? என்கிற கேள்வி பரவலாக எழுந்திருக்கிறது. சட்டமன்ற தேர்தலில் தவெக பெரும்பான்மை பெற்றாலும், தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கு போதிய பலத்தை கொண்டிருக்கவில்லை. அப்போது காங்கிரஸ் முதல் ஆளாய் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தது. பின்னர் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் தவெக ஆதரவு கேட்டது. சிபிஐ, சிபிஎம் என இரு கட்சிகளும், இது தொடர்பாக ஆலோசித்துவிட்டு சொல்வதாக அறிவித்தன.
பின்னர் விசிக திருமாவளவனிடம் தவெக ஆதரவு கேட்டது. அப்போது அவர் சொன்ன பதில்தான் ரொம்பவும் முக்கியமானது. “விஜய்க்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் என் முடிவு கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்ததே!” என்று கூறியிருந்தார். அதாவது கம்யூனிஸ்ட் கட்சிகள் என்ன முடிவெடுக்கிறார்களோ! அதுதான் என் முடிவு என்று கூறியிருந்தார். ஆனால், கம்யூனிஸ்ட் கட்சிகள் விஜய்க்கு ஆதரவு கொடுப்பதாக அறிவித்த பின்னரும், ஒரு நாள் தள்ளிதான் திருமாவளவன் தனது முடிவை அறிவித்தார்.
இப்போது கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்து போட்டியிடுவதாக கூறியிருக்கின்றன. திருமாவளவன் இந்த முடிவையே அறிவிக்கப்போகிறாரா? அல்லது தவெகவுக்கு ஆதரவு கொடுக்கப்போகிறாரா? என்று கேள்வி எழுந்திருக்கிறது.
