எ.வ.வேலுவுக்கு எதிரான ஊழல் வழக்கு; நீதிமன்றம் உத்தரவால் திடீர் திருப்பம்!

கடந்த 2022 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக எ.வ.வேலு இருந்தபோது, திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் சாலை அமைக்கும் பணிகளைச் செய்யாமலேயே ஒப்பந்ததாரர்களுக்குப் பல கோடி ரூபாய் பணம் விடுவிக்கப்பட்டதாக அறப்போர் இயக்கம் அமைப்பு ஊழல் புகார் அளித்தது. இந்தப் புகாரின் அடிப்படையில், தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, அவருக்குத் தொடர்புடைய இடங்களில் அண்மையில் சோதனைகளை நடத்தியது.

இந்த வழக்குத் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி கடந்த ஜூன் 30 அன்று அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால், அவர் அதற்கு முன்பாகவே மருத்துவ சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றுவிட்டதால் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதன் காரணமாக லஞ்ச ஒழிப்புத்துறை அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தது. தனக்கு எதிரான வழக்கை மற்றும் லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்யக் கோரி எ.வ.வேலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

அந்த வழக்கில் எ.வ.வேலுவுக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸ்க்கு இடைக்காலத் தடை விதிப்பதாக தெரிவித்ததோடு, ஜூலை 12 ஆம் தேதி சிங்கப்பூரில் இருந்து திரும்பியவுடன், ஜூலை 15, 2026 அன்று காலை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை அதிகாரி முன்னிலையில் எ.வ.வேலு நேரில் ஆஜராக வேண்டும். இந்த வழக்குத் தொடர்பாக ஜூலை 28 ஆம் தேதி வரை எ.வ.வேலு மீது எந்தவொரு கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் தனக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்ய வேண்டும் எனவும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தாக்கல் செய்த மனு இன்று (28-07-26) சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். அதனை தொடர்ந்து, எ.வ.வேலு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘ஏற்கெனவே நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை முன் எ.வ.வேலு ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்துள்ளார். அதனால் அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் தேவையில்லாதது’ என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, லஞ்ச ஒழிப்புத்துறை கோரிக்கையை ஏற்று பதில் மனு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கு தொடர்பாக எ.வ.வேலுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பி விசாரிக்கலாம் எனவும் இந்த வழக்கு தொடர்பாக அவருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டார். அதுமட்டுமல்லாமல், எ.வ.வேலுவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட லுக் அவுட் நோட்டீஸை ரத்து செய்வதாகவும், அவர் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் கீழமை நீதிமன்றங்களில் அனுமதி பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டார். இதற்கிடையில், எ.வ.வேலு தாக்கல் செய்த மனுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் சார்பில் இடையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அதற்கு பதிலளிக்க வேண்டும் என எ.வ.வேலு தரப்பிற்கு உத்தரவிட்டுள்ளார். 

Source link