ஏஐ தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது; நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு

மும்பை: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஒரு இருமுனை வாள் போன்றது; இது மோசடிகளைக் கண்டறியவும், அதே சமயம் மோசடிகளைச் செய்யவும் உதவுகிறது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்திய இளைஞர்கள் தொழில்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் டிஜிட்டல் தளங்களை உருவாக்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வேகமாக முன்னோக்கி எடுத்துச் செல்கின்றனர்.இந்திய ரிசர்வ் வங்கி தனது டிஜிட்டல் ரூபாய் கட்டமைப்பை மேலும் பலப்படுத்த வேண்டும். மொத்த மற்றும் சில்லறை விற்பனைக்கான மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி பயன்பாட்டை மேம்படுத்த வேண்டும்.

உலகின் மிக சக்திவாய்ந்த டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பை இந்தியா உருவாக்கியுள்ளது; யுபிஐ மூலம் பல கோடிக்கணக்கான பரிவர்த்தனைகள் கையாளப்பட்டு உள்ளது. தொழில்நுட்பத்தின் அபாயங்களைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் புதுமைகளைப் பாதிக்காத வண்ணம், நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டின் இளம் திறமையாளர்கள் தங்களின் மீதான அவநம்பிக்கைகளைத் தாண்டி, வெற்றிகரமாகத் தொழில்களைக் கட்டமைத்து முன்னேறி வருகின்றனர்.

இந்தத் தொழில்நுட்ப மற்றும் தொழில்முனைவோர் பங்களிப்பானது, 2047ம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான வேகத்தை நிர்ணயிப்பதாக அமைந்துள்ளது. எதிர்மறையான கருத்துக்களைத் தவிர்த்து இந்த மாற்றத்தைக் கொண்டாட வேண்டும். செயற்கை நுண்ணறிவு (ஏஐ) ஒரு இருமுனை வாள் போன்றது; இது மோசடிகளைக் கண்டறியவும், அதே சமயம் மோசடிகளைச் செய்யவும் உதவுகிறது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

Source link