மும்பை: நடப்பு நிதியாண்டில் அலுமினியம் துறையின் விற்பனை மற்றும் ஏற்றுமதி கணிசமாக அதிகரிக்கும் என சி.எம்.ஐ.இ., தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான சி.எம்.ஐ.இ., தெரிவித்துள்ளதாவது:
அலுமினியம் விலை உயர்வு, உள்நாட்டு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி அதிகரிப்பு ஆகியவை துறையின் வருவாய்க்கு ஆதரவாக உள்ளன. 2026–27ம் நிதியாண்டில் அலுமினியம் மற்றும் அலுமினிய பொருட்கள் துறையின் விற்பனை வருவாய் 35 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. செலவுகள் 25 சதவீதம் அதிகரித்தாலும், விற்பனை அதைவிட வேகமாக வளர்வதால் செயல்பாட்டு லாபம் கிட்டத்தட்ட 75 சதவீதம் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் காலாண்டிலும் துறையின் லாபம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அலுமினியம் விலை உயர்வு, உற்பத்தி மற்றும் ஏற்றுமதி வளர்ச்சி காரணமாக விற்பனை வருவாய் கிட்டத்தட்ட 43 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இதன் பயனாக செயல்பாட்டு லாபமும், நிகர லாபமும் தலா கிட்டத்தட்ட 80 சதவீதம் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது
நாட்டில் வாகன உற்பத்தி, மின் பரிமாற்றம் மற்றும் கட்டுமான துறைகளில் அலுமினியத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதும் தேவைக்கு ஆதரவாக உள்ளது. நடப்பு நிதியாண்டில் முதன்மை அலுமினியம் உற்பத்தி 5 சதவீதம் உயர்ந்து 44.68 லட்சம் டன்னாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பால்கோ நிறுவனத்தின் கோர்பா உருக்கு ஆலையின் விரிவாக்கப்பட்ட உற்பத்தித் திறன் படிப்படியாக பயன்பாட்டுக்கு வருவதும் இதற்கு துணையாக இருக்கும்.
அதேநேரம், நடப்பு நிதியாண்டில் புதிதாக செயல்பாட்டுக்கு வரும் அலுமினிய திட்டங்களின் மதிப்பும், உற்பத்தித் திறன் சேர்ப்பும் கடுமையாக குறையும். 2025–26ல் 14,028.50 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்த நிலையில், 2026–27ல் இது 858.31 கோடி ரூபாயாக குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது. புதிய உற்பத்தி திறன் சேர்ப்பும் 6.32 லட்சம் டன்னில் இருந்து 1.06 லட்சம் டன்னாக குறையும். முந்தைய ஆண்டில் பல பெரிய திட்டங்கள் ஒரே நேரத்தில் நிறைவு பெற்றதே இந்த சரிவுக்கு முக்கிய
காரணமாகும் என சி.எம்.ஐ.இ., தெரிவித்துள்ளது.
ஏற்றுமதி, உற்பத்தி நிலவரம்
விபரம் : 2025–26 : 2026–27 மதிப்பீடு : மாற்றம்
ஏற்றுமதி : 14.83 லட்சம் டன் : 15.88 லட்சம் டன் : 7.10% உயர்வு
உற்பத்தி : 42.57 லட்சம் டன் : 44.68 லட்சம் டன் : 5% உயர்வு
இறக்குமதி : 4.62 லட்சம் டன் : 4.26 லட்சம் டன் : 7.80% சரிவு
முதலீட்டு நிலவரம்
நிதியாண்டு : செயல்பாட்டுக்கு வந்த திட்டங்கள் : உற்பத்தித் திறன் சேர்ப்பு
2024–25 : 60 கோடி ரூபாய் : 0 டன்
2025–26 : 14,028.50 கோடி ரூபாய் : 6.32 லட்சம் டன்
2026–27* : 858.31 கோடி ரூபாய் : 1.06 லட்சம் டன்
Synopsis
– ஏற்றுமதி மீட்சி: நான்கு ஆண்டுகள் சரிவுக்கு பின், 2026–27ல் முதன்மை அலுமினியம் ஏற்றுமதி 7.1 சதவீதம் அதிகரித்து 15.88 லட்சம் டன்னாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
– உற்பத்தி உயர்வு: உள்நாட்டு முதன்மை அலுமினியம் உற்பத்தி 5 சதவீதம் அதிகரித்து 44.68 லட்சம் டன்னாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது
– விற்பனை, லாபம் மேம்பாடு: 2026–27ல் துறையின் விற்பனை வருவாய் 35 சதவீதமும், செயல்பாட்டு லாபம் கிட்டத்தட்ட 75 சதவீதமும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
– புதிய திட்டங்கள் குறைவு: செயல்பாட்டுக்கு வரும் திட்டங்களின் மதிப்பு 2025–26ல் 14,028.50 கோடி ரூபாயிலிருந்து, 2026–27ல் 858.31 கோடி ரூபாயாக குறையும் என
மதிப்பிடப்பட்டுள்ளது.
