ஒடிசாவில் மீட்கப்பட்ட ஒராங் உடான் குரங்குகளை மீட்க தீவிரம்; மத்திய அரசுக்கு இந்தோனேசியா கடிதம்

ஜகார்த்தா: ஒடிசா வனத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஒராங் உடான் குரங்குகளை இந்தோனேசியா கொண்டு செல்வதற்கு அந்நாட்டு நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்நாட்டு அரசு சார்பில் மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அடர்வனப்பகுதியில் மட்டுமே வாழக்கூடிய மற்றும் அழிவில் விளிம்பில் இருக்கும் ஒரு உயிரினம் ஒராங் உடான் குரங்குகள். இதன் 5 குட்டிகள் அண்மையில் ஒடிசாவில் வனப்பகுதி ஒன்றில் இருந்து மீட்கப்பட்டன.

இவ்விவகாரம் தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரிதாக பேசப்பட்டது. குரங்குகள் கடத்தப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது.

இந் நிலையில், மீட்கப்பட்ட ஒராங் உடான் குரங்கு குட்டிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளதாக மத்திய வனத்துறைக்கு இந்தோனேசியா வனத்துறை தரப்பில் இருந்து கடிதம் ஒன்று எழுதப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது;

சர்வதேச அளவில் இயங்கும் கடத்தல் கும்பல், குரங்குகள் கடத்தலில் ஈடுபட்டு இருக்கலாம். இந்தோனேசியாவில் இருந்து சட்ட விரோதமாக இந்தியாவுக்கு கடத்தி வந்து பின்னர் விட்டுச் சென்றிருக்கலாம். எனவே மீட்கப்பட்ட குரங்கு குட்டிகளை டிஎன்ஏ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்.

சோதனையின் முடிவில் அவை இந்தோனேசியா காடுகளை சேர்ந்தவை என்பது உறுதியானால், அவைகளை சொந்த நாட்டுககு அழைத்து வர உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இவ்வாறு கடித்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

ஒராங் உடான் குரங்குகள் எவ்வாறு இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டன, அதன் பின்னணியில் உள்ள சர்வதேச கும்பல் யார்? என்பது குறித்து இந்திய வனவிலங்கு குற்றக்கட்டுப்பாட்டு பணியகமும், ஒடிசா மாநில வனத்துறையும் தீவிரமாக விசாரணையில் இறங்கி உள்ளன.

Source link