வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பணம், காசோலை பரிவர்த்தனை நாடு முழுவதும் இன்று முடங்கியது.
வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
ஸ்டிரைக்
வாரத்தில் 5 நாட்கள் வேலை, அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறையாக அறிவிக்க வேண்டும், புதிதாக பணிக்குச் சேர்ந்த ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடக்கிறது.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பு உள்ளிட்ட 7 சங்கங்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்தியா முழுவதும் ஒரு லட்சம் வங்கிக் கிளைகளில் பணியாற்றும் 8 லட்சம் ஊழியர்கள், அதிகாரிகள் பணிக்குச் செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
தமிழகம்
தமிழகத்தில் 18,000 கிளைகள் செயல்படுகின்றன. இதில் பணியாற்றும் 60,000 பேர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
பொதுத்துறை வங்கிகள் மட்டுமல்லாது தனியார் வங்கிகள், கூட்டுறவு வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்டதால் வங்கி சேவை முற்றிலும் முடங்கியது.
வங்கிக் கிளை மேலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகளும் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டதால் பெரும்பாலான கிளைகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் வங்கிகளில் பணம், காசோலை டெபாசிட் செய்தல், பணம் எடுத்தல், காசோலை பரிவர்த்தனை உள்ளிட்ட சேவைகள் முழுவதும் நடைபெறவில்லை.
இதனால் வங்கி வாடிக்கையாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளானார்கள். வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள் தங்களது அன்றாட பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாமல் சிரமப்பட்டன.
காசோலை முடங்கியது
சென்னையில் உள்ள வங்கிகளில் ஊழியர்கள் இல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டன. நுழைவு வாசல்கள் அடைக்கப்பட்டிருந்தன.
வங்கி ஊழியர்கள் போராட்டத்தால் இன்று ஒரு நாள் மட்டும் பல லட்சம் கோடி காசோலை, பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டன. லட்சக்கணக்கான காசோலைகள் தேங்கின.
சென்னையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் தலைமையில் நடந்த போராட்டத்தில் கலந்துகொண்டு கோஷங்களை எழுப்பினார்கள்.
போராட்டத்தின்போது சி.எச்.வெங்கடாசலம் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு அதனை நடைமுறைப் படுத்தவில்லை. திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான 5 நாட்கள் வேலை நேரத்தில் 40 நிமிடங்கள் அதிகரிக்கும்படி கேட்டுக் கொண்டோம். இதனைச் செயல்படுத்தாததால் வங்கி அதிகாரிகள், ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எங்களது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்டமாக வரும் 28, 29 மற்றும் 30-ம் தேதி அகில இந்திய அளவில் வேலைநிறுத்தம் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார்.
வங்கி சேவை பாதிப்பு
இதற்கிடையில், வேலைநிறுத்தத்தால் இன்று மூடப்பட்ட வங்கிகள் தொடர்ந்து மேலும் 3 நாட்கள் மூடப்படுகிறது. அரசு விடுமுறை காரணமாக 4 நாட்கள் வங்கிகள் செயல்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கி சேவை கடுமையாக பாதிக்கும். ஏ.டி.எம்.கள் பணம் இல்லாமல் செயல்படாத நிலை உருவாகிறது.
