ஒரு தொடர், 2 அணிகள்… பிக்கிள்பால் உலகக் கோப்பைக்கு செல்வதில் குழப்பமா? விளக்கும் இந்திய அசோசியேஷன் தலைவர்

பிக்கிள்பால் உலகக் கோப்பை (Pickleball World Cup) போட்டிகள் கடந்த 2024-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2026-ஆம் ஆண்டுக்கான பிக்கிள்பால் உலகக் கோப்பை போட்டிகள் வருகிற ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 6 வரை வியட்நாமின் டா நாங் (Da Nang) நகரில் நடைபெறவுள்ளது. இதில் இந்தியா சார்பில் 5 அணிகள் பங்கேற்க உள்ளனர். இது தொடர்பான அறிவிப்பை இந்தியப் பிக்கிள்பால் அசோசியேஷன் (Indian Pickleball Association) வெளியிட்டது. 

ஒரு தொடர் – 2 அணிகள் 

அதன்படி, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஒரு அணியும், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஒரு அணியும் உள்ளன. மேலும், ‘ஓபன் ப்ரோ’ (open pro) பிரிவு அணி ஒன்றும், 50 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கான அணிகள் தலா ஒன்றும் களமிறங்க உள்ளனர். இதனிடையே, இந்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் தேசிய விளையாட்டு சம்மேளனம் ஆகியவற்றால் அங்கீகரிக்கப்படாததாக சொல்லப்படும், அனைத்திந்திய பிக்கிள்பால் சங்கம் (All India Pickleball Association) பிக்கிள்பால் உலகக் கோப்பைக்கான இந்திய அணியை சமீபத்தில் அறிவித்தது. இந்நிலையில், ஒரு தொடரில் இரண்டு இந்திய அணிகள் பங்கேற்பது குறித்த செய்திகள் வெளியாகி இருப்பது விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதில் எந்த அணி இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்கிறது என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. 

இந்தியப் பிக்கிள்பால் அசோசியேஷன் தலைவர் விளக்கம் 

இது தொடர்பாக இந்தியப் பிக்கிள்பால் அசோசியேஷன் தலைவர் சூர்யவீர் சிங் புல்லர் விளக்கம் அளித்தார். நம்மிடம் அலைபேசியில் அவர் பேசுகையில், “2026 பிக்கிள்பால் உலகக் கோப்பை தொடர் ‘ஓபன் டோர்னமென்ட்’ (திறந்தநிலை போட்டி) ஆக நடைபெறவிருக்கிறது. அதில் விளையாட இந்தியாவைச் சேர்ந்த சில வீரர்கள் செல்கிறார்கள். அவர்கள் இந்தியாவின் அதிகாரப்பூர்வ அணியைச் சார்ந்தவர்கள். அதிகாரப்பூர்வ இந்திய அணியை அனுப்ப ‘இந்தியன் பிக்கிள்பால் அசோசியேஷன்’ மட்டுமே அழைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக இதுதான் நடைமுறையில் உள்ளது. ‘ஓபன் டோர்னமென்ட்’ ஆக நடைபெற இருப்பதால் இந்தியன் பிக்கிள்பால் அசோசியேஷனில் இடம் பெறாத வீரர், வீராங்கனைகளுக்கு பங்கேற்கிறார்கள். 

இத்தொடர் முதலில் பெரு நாட்டில் நடந்தது. அது மிகத் தொலைவில் இருந்தது. கடந்த ஆண்டு புளோரிடாவில் நடந்தது. அதுவும் வெகு தொலைவில் இருந்தது, அத்துடன் விசா தொடர்பான சிக்கல்களும் இருந்தன. எல்லோரிடமும் அமெரிக்க விசா இருப்பதில்லை. இம்முறை போட்டி வியட்நாமில் நடைபெறுகிறது. இது நமது நாட்டுக்கு அருகிலேயே உள்ளது. எனவே, அதிகாரப்பூர்வ அணியைத் தவிரவும் இந்தியாவிலிருந்து ஏராளமான வீரர்கள் செல்கிறார்கள். இந்தியாவிலிருந்து 200-க்கும் மேற்பட்ட வீரர்கள் இந்தப் போட்டியில் விளையாடச் செல்கிறார்கள் என்று நினைக்கிறேன்.” என்று தெரிவித்தார். 

அப்போது, இந்திய அணி சார்பில் களமிறங்காத வீரர், வீரங்கனைகளும் இந்தியக் கொடி ஏந்திக் கொள்வார்களா? எனக் கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர், இந்தியாவில் இருந்து செல்லும் பங்கேற்பாளர்கள் அனைவரும் தங்கள் சொந்தத் தகுதியின் அடிப்படையில் தனிப்பட்ட பங்கேற்பாளர்களாகவே செல்கிறார்களே தவிர, அதிகாரப்பூர்வ இந்திய அணியாக (Team India) அல்ல. இந்தியாவில் வசிப்பவர்கள் என்ற முறையில் அவர்கள் இந்தியக் கொடியைத் தாங்கி விளையாடினாலும், உலகக் கோப்பையில் அவர்கள் அதிகாரப்பூர்வ இந்திய அணியாகக் கருதப்படமாட்டார்கள்; மாறாக, தனிப்பட்ட பங்கேற்பாளர்களாகவே கருதப்படுவார்கள்.

இந்திய பிக்கிள்பால் அசோசியேஷன் மட்டுமே தேசிய விளையாட்டு சம்மேளனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பு. இந்தியாவில் எந்தவொரு நிர்வாகத்தையும், ஒழுங்குமுறையையும் செய்ய அல்லது வீரர்களை நிர்வகிக்க அதற்கு மட்டுமே அனுமதி உண்டு. மற்ற அனைத்தும் ஒரு தனியார் அமைப்பாகவே செயல்படுகின்றன. அவற்றுக்கு எந்த சட்டப்பூர்வத் தன்மையும், சட்ட அங்கீகாரமும், அதிகாரப்பூர்வ அங்கீகாரமும் இல்லை.” என்று சூர்யவீர் சிங் புல்லர் தெரிவித்தார். 

ஏன் இந்த குழப்பம்? என்று நாம் அவரிடம் வினவினோம். அதற்கு இந்தியப் பிக்கிள்பால் அசோசியேஷன் சூர்யவீர் சிங் புல்லர், “சிலர் வேண்டுமென்றே உருவாக்க முயற்சிக்கிறார்கள். விளையாட்டின் முன்னேற்றத்திற்காக உழைத்து, எங்களுடன் வந்து பணியாற்றி, எங்களுடன் கைகோர்ப்பதற்குப் பதிலாக, அவர்கள் தேவை இல்லாத குழப்பத்தை உருவாக்க விரும்புகிறார்கள். இந்தியா முழுவதிலுமிருந்து அனைத்து வீரர்களையும் எங்களது அசோசியேஷனி-ன் கீழ் இந்தியாவுக்காக வந்து விளையாட வரவேற்கிறோம். இந்த விளையாட்டின் முன்னேற்றத்திற்காக, நாம் இந்த அரசியல் மற்றும் குழப்பங்கள் அனைத்திலிருந்தும் விடுபட்டு இருப்போம் என்று நம்புகிறேன்.” என்று கூறினார். 

அனைத்திந்திய இந்தியப் பிக்கிள்பால் அசோசியேஷன் கருத்து 

இந்த விவகாரத்தில் அனைத்திந்திய இந்தியப் பிக்கிள்பால் அசோசியேஷன் கருத்தை நாம் கேட்டபோது, அவர்கள் 2026 பிக்கிள்பால் உலகக் கோப்பை போட்டிக்கு ஐரோப்பிய பிக்கிள்பால் கூட்டமைப்பு சார்பில் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ அங்கீகாரத்தை பகிர்ந்து இருக்கிறார்கள். இதுகுறித்து ஐரோப்பிய பிக்கிள்பால் கூட்டமைப்பின் (European Pickleball Federation – EPF) தலைவர் ஃபிராங்க் அரிகோ வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில், “2026 ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 6 வரை வியட்நாமின் டா நாங் நகரில் நடைபெறவுள்ள 2026 பிக்கிள்பால் உலகக் கோப்பை போட்டியை அங்கீகரிப்பதிலும், அதற்கு ஆதரவு தெரிவிப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். விளையாட்டு வீரர்கள் போட்டியிடவும், தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ளவும், சர்வதேச பிக்கிள்பால் சமூகத்தினரிடையே தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் அர்த்தமுள்ள வாய்ப்புகளை உருவாக்குவதில் தங்கள் நேரம், வளங்கள் மற்றும் ஆற்றலை அர்ப்பணிக்கும் அமைப்புகள் மற்றும் தனிநபர்களின் பங்களிப்பிலேயே பிக்கிள்பால் விளையாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சி தங்கியுள்ளது. 

தற்போதுள்ள சர்வதேச பிக்கிள்பால் அமைப்புகள் விஷயத்தில் ஐரோப்பிய பிக்கிள்பால் கூட்டமைப்பு நடுநிலையான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. எனவே, இந்தப் போட்டியை அங்கீகரிப்பதை, ஏதேனும் குறிப்பிட்ட சர்வதேச கூட்டமைப்பு அல்லது நிர்வாக அமைப்பிற்கான ஆதரவாகவோ அல்லது அதனுடன் இணைந்த செயல்பாடாகவோ கருதக்கூடாது. அதேபோல, இந்த அங்கீகாரம் என்பது குறிப்பாக இந்த நிகழ்வு மற்றும் அதில் பங்கேற்பாளர்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகள் சார்ந்தது மட்டுமே. உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஒற்றை சர்வதேச நிர்வாகக் கட்டமைப்பின் கீழ், அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட உலக சாம்பியன்ஷிப் அல்லது அதிகாரப்பூர்வ உலகக் கோப்பை என்ற அந்தஸ்தை இந்தப் போட்டிக்கு வழங்குவதாக இதை அர்த்தப்படுத்திக்கொள்ளக் கூடாது. 

ஒற்றை, சுதந்திரமான, ஜனநாயக மற்றும் முறையான கட்டமைப்பு கொண்ட சர்வதேச கூட்டமைப்பின் கீழ் சர்வதேச பிக்கிள்பால் நிர்வாகத்தை ஒருங்கிணைக்க வேண்டும் என்று ஐரோப்பிய பிக்கிள்பால் கூட்டமைப்பு தொடர்ந்து வலுவாக வலியுறுத்தி வருகிறது. எதிர்காலத்தில் அதிகாரப்பூர்வ சர்வதேச மற்றும் உலகளாவிய அளவிலான போட்டிகளை அங்கீகரிப்பதற்கும் அனுமதி வழங்குவதற்கும் உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கட்டமைப்பை உருவாக்க இத்தகைய ஒருங்கிணைப்பு அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். அதே வேளையில், பங்கேற்பு, சர்வதேச விளையாட்டு பரிமாற்றம் மற்றும் பிக்கிள்பால் விளையாட்டின் பொறுப்பான வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் நம்பகமான முயற்சிகளை ஆதரிப்பது முக்கியம் என்றும் ஐரோப்பிய பிக்கிள்பால் கூட்டமைப்பு கருதுகிறது. 

இந்த அடிப்படையில், 2026 பிக்கிள்பால் உலகக் கோப்பை நிகழ்வை அங்கீகரிப்பதில் ஐரோப்பிய பிக்கிள்பால் கூட்டமைப்பு மகிழ்ச்சியடைகிறது; மேலும், இவ்வளவு பெரிய அளவிலான சர்வதேச போட்டியை நடத்துவதற்குத் தேவையான பெரும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியதற்காக ஏற்பாட்டாளர்கள் மற்றும் இதில் ஈடுபட்ட அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். இதில் பங்கேற்க ஆர்வமுள்ள தகுதியுடைய ஐரோப்பிய விளையாட்டு வீரர்கள், ஏற்பாட்டாளர்களின் தகுதித் தேவைகள், பதிவு நிபந்தனைகள், போட்டி விதிமுறைகள் மற்றும் அதிகாரப்பூர்வ விதிமுறைப் புத்தகத்திற்கு உட்பட்டு பங்கேற்பது குறித்து பரிசீலிக்குமாறு ஊக்குவிக்கிறோம். விளையாட்டுப் போட்டி, நட்பு மற்றும் உலகம் முழுவதும் பிக்கிள்பால் விளையாட்டின் தொடர்ச்சியான வளர்ச்சி ஆகியவற்றைக் கொண்டாடும் வகையிலான ஒரு மகிழ்ச்சியான மற்றும் மறக்கமுடியாத நிகழ்வை நடத்துவதில் ஏற்பாட்டாளர்கள், பங்கேற்பாளர்கள், அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் முழு வெற்றிபெற வாழ்த்துகிறோம்.” என்று அவர் கூறியிருக்கிறார். 

டெல்லி ஐகோர்ட் தீர்ப்பு 

முன்னதாக, இந்தியாவில் ‘பிக்கிள்பால்’ (Pickleball) விளையாட்டிற்கான தேசிய விளையாட்டு சம்மேளனமாக (NSF) ‘இந்திய பிக்கிள்பால் அசோசியேஷன்’ (IPA) அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து, ‘அகில இந்திய பிக்கிள்பால் சங்கம்’ (AIPA) தாக்கல் செய்திருந்த ரிட் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்தத் தீர்ப்பின் மூலம், தேசிய அளவில் பிக்கிள்பால் (pickleball) விளையாட்டின் வளர்ச்சி மற்றும் நிர்வாகத்திற்குப் பொறுப்பான அமைப்பாக இந்தியப் பிக்கிள்பால் அசோசியேஷன் தனது பங்கைத் தொடர்ந்து வகிக்கிறது.

விரைவில் பயிற்சி முகாம் 

இதனிடையே, பிக்கிள்பால் உலகக் கோப்பை போட்டிக்கு இந்திய வீரர், வீரங்கைகளின் தயாரிப்பு குறித்து இந்தியப் பிக்கிள்பால் அசோசியேஷன் சூர்யவீர் சிங் புல்லர் கூறுகையில், “போட்டி நடைபெறும் தேதிகள் ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 2 வரை ஆகும். உலகக் கோப்பை செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்குகிறது; அன்று தொடக்க விழா நடைபெறவுள்ளது. அதில் அணிகளுடன் வந்துள்ள அனைத்து நாடுகளும் பங்கேற்கும். பின்னர், 3 முதல் 6-ஆம் தேதி வரை அதிகாரப்பூர்வ உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும். 

எங்கள் அணி மிகவும் சிறப்பாக உள்ளது. அவர்கள் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நாங்கள் மொத்தம் 5 அணிகளை அனுப்புகிறோம். அதன்படி, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஒரு அணியும், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஒரு அணியும் உள்ளன. மேலும், ‘ஓபன் ப்ரோ’ (Open Pro) பிரிவில் ஒரு அணியும், 50 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவுகளில் தலா ஒரு அணியும் உள்ளன.

நமது வீரர்கள் மிகுந்த தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்கள். அவர்களுக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. அடுத்த மாதம் பயிற்சி முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். அகமதாபாத் மற்றும் மும்பையில் பயிற்சி முகாம்களை நடத்த உள்ளோம். குஜராத், மும்பை மற்றும் சென்னையைச் சேர்ந்த வீரர்கள் இதில் உள்ளனர்.” என்றார். 

Source link