இங்கிலாந்தில் தினமும் ஆயிரக்கணக்கான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் தேசிய வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் கம்ப்யூட்டர் இயக்கத்தில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அந்நாட்டின் வினாம சேவைகள் ஒட்டுமொத்தமாக முடங்கின.
பொதுவாக விமானப்போக்குவரத்தை பொறுத்தவரையில், ஒரு விமானம் தாமதமானால் கூட அது அடுத்தடுத்த விமானத்தின் நேரங்களையும் பாதிக்கும். அதே போல, அது தரையிறங்கும் விமான நிலையத்தின் விமானங்களின் நேரங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இது போன்ற சூழலில், தேசிய வான்வழி போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பின் மின்னணு அமைப்பில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால், முற்றிலும் விமானத்தை இயக்கமுடியாமல் போனது. இதன்காரணமாக, ஹீத்ரோ, கேட்விக், ஸ்டான்ஸ்டெட், மான்செஸ்டர், பர்மிங்கம் மற்றும் ஸ்காட்லாந்து உள்ளிட்ட 15 முக்கிய விமான நிலையங்களில் 1000க்கும் மேற்பட்ட விமானங்கள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டன. இந்த விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் விமான நிலைய முனையங்கள், ஓடுபாதையில் நின்ற விமானங்களில் உள்ள பயணிகள் உள்ளிட்டோர் பல மணி நேரம் உணவு தட்டுப்பாடு மற்றும் மன உளைச்சலால் தவித்து வந்தனர்.
இந்நிலையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் 100க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்த நிலையில், ரையான்ஏர் நிறுவனத்தின் 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால், 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மாலைப்பொழுதில் இந்த தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டாலும், இதன் தாக்கம் ஐரோப்பிய நாடுகள் முழுவதும் எதிரொலித்ததாகவும், நிலைமை இயல்பு நிலைக்குத் திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகும் எனவும் விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம், பிரிட்டனின் தேசிய விமானப்போக்குவரது சேவையை நிர்வகிக்கும் நேட்ஸ் மீது பல்வேறு கேள்விகளையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது. ஒரே ஒரு சிறிய தொழில் நுட்பக் கோளாறு காரணமாக ஏற்பட்ட இந்த சிக்கல் பல்வேறு நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
