கிழக்கு கடற்கரை சாலை வழியாக சுமார் 179 கி.மீ. தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு கடந்த 2017- 18ஆம் ஆண்டில் திட்ட மதிப்பீடு தயாரிக்க நிதி ஒதுக்கப்பட்டு, ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்டிருந்தது.
புதுச்சேரி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நிலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட்டதால் திட்டப் பணிகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து திட்டத்தை விரைந்து செயல்படுத்தக் கோரி ரயில் பயணிகள் சங்கத்தினர் மற்றும் பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்கள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனினும், இத்திட்டம் கடந்த சுமார் 8 ஆண்டுகளாக கிடப்பில் இருந்து வந்தது.
இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் இத்திட்டம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிலளித்தார். அப்போது திட்டத்தின் தற்போதைய நிலை மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் விளக்கம் அளித்தார். பொதுமக்களின் தொடர் கோரிக்கைகள் மற்றும் தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளின் பொருளாதார வளர்ச்சியை கருத்தில் கொண்டு, சென்னை கடலூர் ரயில் பாதை திட்டத்தை மீண்டும் முன்னெடுத்துச் செல்ல ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரையிலான 565 கி.மீ. தொலைவுக்கு 3-வது மற்றும் 4-வது ரயில் பாதைகள் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, இறுதிக்கட்ட ஆய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.
