52 முதுநிலை கோயில்களில் செல்போனுக்குத் தடை; அறநிலையத்துறை அதிரடி!

தமிழ்நாட்டின் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 52 முதுநிலை கோயில்களில் நேற்று (செப்.1) முதல் செல்போன் கொண்டு செல்ல முழு தடை விதிக்கப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. ஏற்கனவே நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் பழனி, திருச்செந்தூர், மதுரை, இராமேஸ்வரம் போன்ற கோயில்களில் உள்ள நடைமுறைகளின் அடிப்படையில், புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும் பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். சுவாமி சிலைகளைப் படம் எடுப்பது, வீடியோ, செல்ஃபி மற்றும் ரீல்ஸ் எடுப்பதால் பிற பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைத் தடுக்கவே இத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காகக் கோயில்களில் பாதுகாப்பு கவுண்டர்கள், லாக்கர்கள் மற்றும் மென்பொருள் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இச்சேவைக்கான ஊழியர் மற்றும் தொழில்நுட்ப பராமரிப்புச் செலவுக்காக மட்டும் ஒரு செல்போனுக்கு ரூ.5 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது வருவாய்க்கானது அல்ல என்றும், எதிர்காலத்தில் இத்திட்டம் சிறிய கோயில்களுக்கும் விரிவுபடுத்தப்படும்போது ஒரே சீரான நடைமுறையைப் பராமரிக்கவே இக்கட்டணம் என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. கவுண்டர்களில் கூட்டம் சேர்வதைத் தவிர்க்க கூடுதல் கவுண்டர்களை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதுடன், பக்தர்கள் தங்களது அறைகளிலோ, வாகனங்களிலோ அல்லது வீடுகளிலோ செல்போன்களை வைத்துவிட்டு வந்து நேரத்தைச் சேமிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அதே வேளையில், கேமரா வசதி இல்லாத சாதாரண செல்போன்களை கோயிலுக்குள் கொண்டு செல்ல எந்தத் தடையும் இல்லை என்றும், அவசர தேவைகளுக்கு கோயில் பணியாளர்கள் உதவுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயில்களின் ஆன்மிக பாரம்பரியத்தையும் அமைதியான சூழலையும் பாதுகாக்க பக்தர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Source link