மராட்டிய மாநிலத்தில், கடந்த மார்ச் மாதம் மருந்து ஆய்வாளர் பணிக்கான குருப்-பி தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள் கசிவு நடந்துள்ளது அம்பலமானது. இதன் காரணமாக, இந்த தேர்வில் 7 வது இடம் பிடித்த பெண் தேர்வர் உட்பட 7 பேரை மும்பை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், அரசு தேர்வுகளில் நடக்கும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு போன்ற முறைகேடுகளைக் கண்டித்து புனேவில் நேற்று (07-09-26) இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில், அரசு தேர்வு செயல்முறைகளில் வெளிப்படைத்தன்மை வேண்டும் என அரசுப்பணிக்குத் தயாராகி வரும் இளைஞர்கள் மற்றும் தேர்வர்கள் ஆயிரக்கணக்கானோர் திடீரென ஒன்று கூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு, இவர்கள் பேரணியாக சென்றனர்.
புனேவில் உள்ள ஓம்காரேஷ்வர் கோவிலில் தொடங்கிய இந்தப் பேரணி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கிச் சென்றது. இந்த பேரணியில், எம்.பி.எஸ்.சி தலைவர் மற்றும் ஆணையத்தின் செயலாளர் ஆகியோர் பதவி விலகக் கோரி இளைஞர்கள் பதாகைகளை ஏந்திச் சென்றனர். மேலும், அரசு தேர்வுகளை நேர்மையான முறையில் நடத்த வேண்டும் எனவும், நேர்மையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.
இந்த போராட்டத்திற்கு, மகா விகாஸ் அகாடி (எம்விஏ) கூட்டணியைச் சேர்ந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் தங்களது ஆதரவை வழங்கினர். அந்த வகையில், என்சிபி (சரத்சந்திர பவார்) யின் செயல் தலைவர் எம்.பி. சுப்ரியா சூலே மற்றும் எம்.எல்.ஏ. ரோஹித் பவார் ஆகியோர் புனேவில் இளைஞர்களுடன் பேரணியில் கலந்துகொண்டனர்.
அதே நேரத்தில், இந்த போராட்டத்திற்கு மக்களைவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராகுல்காந்தி, சிவசேனா (யுபிடி) தலைவர் ஆதித்யா தக்கரே, உள்ளிட்ட எதிர்க் கட்சித் தலைவர்களும் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். முன்னதாக, இதே போன்று தேர்வு முறை கேட்டை கண்டித்துக் கரப்பான் பூச்சிகள் கட்சியின் சார்பில் டெல்லியில் போராட்டம் நடத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
