சென்னை மெட்ரோ நெட்வொர்க் திறன் அதிகரிக்க திட்டம்: ரூ.36 கோடியில் சி.எம்.ஆர்.எல். ஒப்பந்தம் கையெழுத்து

சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், தற்போது பயன்பாட்டில் உள்ள மெட்ரோ ரயில் வழித்தடத்தின் செயல்பாட்டுத் திறனை (Operational Capacity) மேம்படுத்துவதற்காக, திட்ட மேலாண்மை நிறுவனத்தை (Project Management Company) நியமிப்பதற்கான ஒப்பந்தத்தில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், ‘ஏகாம் இந்தியா பிரைவேட் லிமிடெட்’ (AECOM India Pvt Ltd) மற்றும் ‘நிப்பான் கோய் இந்தியா’ (NIPPON KOEI India) ஆகிய நிறுவனங்களின் கூட்டு நிறுவனத்திற்கு (Joint Venture) 35.97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வழங்கப்பட்டுள்ளது.

இந்த முதற்கட்ட வழித்தடத் திறன் மேம்பாட்டுத் திட்டம், சிக்னலிங் உள்ளிட்ட அமைப்புகள், உள்கட்டமைப்பு மற்றும் மெட்ரோ ரயில்கள் (Rolling Stock) ஆகியவற்றைப் புதுப்பித்து தரம் உயர்த்துவதன் மூலம் தற்போதுள்ள முதற்கட்ட மெட்ரோ கட்டமைப்பின் திறனை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவைகளைப் பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும், தடையின்றியும் இயக்குவதை உறுதி செய்யும் அதே வேளையில், அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை எளிதாகக் கையாள்வதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

இந்த ஆலோசனை ஒப்பந்தத்தின் கீழ், திட்ட மேலாண்மை பணிகள் மட்டுமின்றி கட்டுமானப் பணிகள் (Civil), ரயில் பாதைகள் (Track), மின்சாரம் மற்றும் இயந்திரவியல் (Electrical & Mechanical) பணிகளுக்கான விரிவான வடிவமைப்பு ஆவணங்கள் தயாரிக்கப்படும். மேலும், பல்வேறு கட்டமைப்பு தொகுப்புகளுக்கான அடிப்படை வடிவமைப்பு, டெண்டர் ஆவணங்களைத் தயாரித்தல், டெண்டர் நடைமுறைகளுக்கான உதவி, கட்டுமானப் பணிகளைக் கண்காணித்தல் (Construction Supervision), திட்ட மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப உதவிகளை வழங்குதல் ஆகியவை இந்த நிறுவனத்தின் பணிகளாகும்.

இத்திட்டம் மற்றும் அதன் பல்வேறு பிரிவுகளின் ஒட்டுமொத்த திட்டமிடல், ஒருங்கிணைப்பு, மேலாண்மை மற்றும் கண்காணிப்புப் பணிகளுக்கு இந்த ஒப்பந்த நிறுவனங்களே முழுப் பொறுப்பேற்கும். இந்த புதிய முன்னெடுப்பு, சென்னையின் மெட்ரோ உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துவதுடன், நகரின் பொதுப் போக்குவரத்துத் தேவையைத் திறம்படக் கையாள்வதற்கான ஆற்றலை கணிசமாக உயர்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source link