கறிக்குழம்பு இல்லாததால் கணவன் ஆத்திரம்; நிலைகுலைந்த மனைவி

கேரளம் மாநிலம், மலப்புரம் மாவட்டம் அருகே உள்ள வண்டூர் பகுதியை அடுத்து பாரசேரி என்ற இடத்தில் ரஷீத் (44) என்பவர் தனது மனைவி பசிலாவுடன் (38) வசித்து வந்தார். ரஷீத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம்.   

இந்நிலையில், நேற்று முன் தினம் ரஷீத் தனது மனைவியிடம் மதிய உணவிற்கு கறிக்குழம்பு சமைத்து வைக்குமாறு கூறிவிட்டு வேலைக்குச் சென்றுள்ளார். பின்பு, மதிய உணவிற்கு வீட்டிற்கு வந்த போது, கறி சமைக்கவில்லை என்பதை அறிந்து மனைவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த ரஷீத் சமையலறையில் இருந்த கத்தியை எடுத்து மனைவியைச் சரமாரியாகக் குத்தியுள்ளார்.  

இதில் நிலைகுலைந்து போன மனைவி பசிலா, அலறியவாறே சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர்,  ரத்த வெள்ளத்தில் கிடந்த பசிலாவை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி பசிலா பரிதாபமாக உயிர் இழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  

சம்பவம், குறித்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், கணவர் ரஷீத்தை கைது விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில், கறிக்குழம்பு சமைக்காததால் ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாகவே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.  இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Source link