தவெக பதவிகளுக்குப் பணம் பேரம்?; அடுத்தடுத்து வெளியான வீடியோக்களால் பரபரப்பு!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தெற்கு ஒன்றிய தவெக நிர்வாகத்தில் கட்சி பொறுப்புகள் மற்றும் வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் பதவிகளுக்கு பணம் பேரம் பேசப்படுவதாக நிர்வாகிகள் சிலர் குற்றம்சாட்டிய வீடியோக்கள் அடுத்தடுத்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருவது அக்கட்சியினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீரனந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கோபிநாத் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோவில், சிறுவயது முதலே விஜய் ரசிகராக இருந்து வருவதாகவும், கட்சி தொடங்கிய பின்னர் மக்கள் பணிகளிலும் கட்சி பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். தனக்கு ஒன்றிய இளைஞரணி பொருளாளர் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும், அதனைத் தொடர்ந்து கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பு தொடர்பாக ஒன்றிய நிர்வாகி ஒருவர் கேள்வி எழுப்பியதால் இருதரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் கோபிநாத் தெரிவித்துள்ளார்.

மேலும், கட்சி பொறுப்பு பெற்றுத் தருவதாகக் கூறி தன்னிடம் பணம் பெறப்பட்டதாகவும், பின்னர் தன்னைவிட அதிக பணம் கொடுத்த மற்றொருவருக்கு அந்தப் பொறுப்பு வழங்கப்பட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர், வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகளுக்கு போட்டியிட விரும்புபவர்களிடம் சுமார் ரூ.1 லட்சம் வரை பணம் பேரம் பேசப்படுவதாகவும், சார்பு அணிகளின் பொறுப்புகளுக்கும் பணம் வசூலிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதேபோல், தவெக நிர்வாகி எழில் அரசனும் கட்சி பொறுப்புகளுக்கு பணம் கேட்கப்படுவதாக குற்றம்சாட்டி வீடியோ வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

அடுத்தடுத்து வெளியாகியுள்ள இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருவதால் காட்டுமன்னார்கோவில் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ‘கட்சி பணிக்கு மட்டும் நாங்கள் வேண்டுமா?’ , ‘கட்சி பணிகளுக்கு மட்டும் நாங்கள் பயன்படுத்தப்படுகிறோமா? பொறுப்புகளும் பதவிகளும் மட்டும் வேறு நபர்களுக்கு வழங்கப்படுகிறதா?’ என சில நிர்வாகிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தவெக நிர்வாகத்தில் பணம் பெற்றுக்கொண்டு கட்சி பொறுப்புகள் மற்றும் பதவிகள் வழங்கப்படுவதாக வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து கட்சி தலைமை உரிய விசாரணை நடத்தி உண்மை நிலையை வெளிக்கொண்டு வர வேண்டும் என அக்கட்சித் தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Source link