சென்னை : ‘நிலத்துக்கு உரிய இழப்பீட்டை, மாதக்கணக்கில் வழங்காமல் காலதாமதம் செய்த அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி அதன் விபரத்தை, நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும்’ என, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.,க்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த எம்.ஆர்.வசந்தன், ‘என் பட்டா நிலத்தை, அதிகாரிகள் நீர்வழிப்பாதையாக மாற்றி உள்ளனர். அதை மீட்டுத்தர வேண்டும்’ என, 2024ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்ற உத்தரவுப்படி, அந்த நிலத்துக்கு, 2.90 கோடி ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டது.இந்த வழக்கு, நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், இ.மனோகரன் அடங்கிய அமர்வில், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், ‘நிலத்துக்கான இழப்பீட்டு தொகையை நிர்ணயம் செய்து, 16 மாதங்களாகியும், அதிகாரிகள் வழங்கவில்லை’ என, தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
அரசியலமைப்பு சட்டத்தை கையில் எடுத்து, அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடுவதற்கு, இந்த வழக்கு மிகச்சிறந்த உதாரணம். பொதுப்பயன்பாடு என்ற பெயரில், உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல், தனியாருக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்தது முதல் தவறு. அடுத்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுப்படி, அந்த நிலத்துக்குரிய இழப்பீட்டை, மாதக்கணக்கில் வழங்காமல், அதிகாரிகள் காலதாமதம் செய்வது கடும் கண்டனத்துக்குரியது.
எனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர், தாம்பரம் ஆர்.டி.ஓ.,, தாம்பரம் தாசில்தார், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் பி.டி.ஓ., மீது, மனுதாரர் செங்கல்பட்டு எஸ்.பி.,யிடம் புகார் அளிக்க வேண்டும். அதன் மீது எஸ்.பி., வழக்குப்பதிவு செய்து விசாரித்து, நாளை(செப்.,03) மாலை 4:30 மணிக்கு, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
