கே.என்.நேருவுக்கு பேரிடியை இறக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை; வெளியான அதிர்ச்சி தகவல்!

கடந்த திமுக ஆட்சியில் கே.என்.நேரு வகித்து வந்த நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில்  ரூ.1,020 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டி நோட்டீஸ் அனுப்பியது. அதாவது, இந்த துறையில் உதவி பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட 2,538 பணியிடங்களுக்கு முறைகேடாக நிரப்பப்பட்டதாகவும், இந்த நியமனங்களில் ரூ.1,020 கோடி வரை ஊழல் நடந்திருக்கலாம் எனவும் அமலாக்கத்துறை குற்றம்சாட்டியது.

இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என அப்போதைய தமிழக தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம் எழுதி அனுப்பியது. ஆனால், இதன் மீது கடந்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. எனவே, அமலாக்கத்துறை அளித்த ஆதாரத்தின் அடிப்படையில் அமைச்சர் கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அதிமுக எம்.பி இன்பதுரை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஏற்கெனவே புகார் அளித்திருந்தார். இதையடுத்து அமலாக்கத்துறை கடிதத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில், கடந்த 5ஆம் தேதி நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் முதன்மை செயலாளருமான கே.என். நேருவுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர். அதாவது திருச்சி தில்லை நகரில் உள்ள அவருக்குச் சொந்தமான இடங்கள், சென்னையில் உள்ள அவருக்குச் சொந்தமான வீடு மற்றும் இடங்கள் மற்றும் அவரது சகோதரர் ரவிச்சந்திரன் தொடர்புடைய இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அதோடு ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கட்டுமான நிறுவனத்திலும் சோதனை நடைபெற்றது.

மேலும் சென்னை அடையாறு, திருவான்மியூர், அண்ணா நகர், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட இடங்களிலும் சோதனையானது நடைபெற்றது. அதே போன்று கோவை சிங்காநல்லூரில் உள்ள கே.என். நேருவின் மற்றொரு சகோதரர் வீடு உள்ளிட்ட பல இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் முடிவில், டெண்டர்களில் நடந்த முறைகேடுகள் தொடர்பான 241 குற்றச்சாட்டுகளை நிரூபிக்கக்கூடிய ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை தகவல் தெரிவித்தது.

இந்த நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. கே.என்.நேரு அவருடைய சகோதரர்கள் மணிவண்னன், ரவிச்சந்திரன், கே.என்.நேருவின் உதவியாளராக இருந்த கவி பிரசாத், சிபிஎஸ் குழுமத்தைச் சேர்ந்த ரமேஷ் மற்றும் பிரபு, முன்னாள் நகரமைப்பு அலுவலராக பணியாற்றிய சசிப்பிரியா, மண்டல பொறியாளராக இருந்த பாலசந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ சுதர்சனம் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.  இது தொடர்பாக எஃப்.ஐ.ஆர் நகலில், 2021 முதல் 2025 வரை டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்திருப்பதாகவும் அமலாக்கத்துறை அளித்த தகவல் மற்றும் 258 பக்க அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசினுடைய முன் அனுமதியுடன் நடத்தப்பட்ட விரிவான விசாரணைக்கு பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,  கவி பிரசாத் மொபைல் போனில் இருந்து கைப்பற்றப்பட்ட வாட்ஸ் அப் உரையாடல்கள் மற்றும் படங்களில் மூலம் டெண்டர் முடிவுகள் திறக்கப்படுவதற்கு முன்பே குறிப்பிட்ட காண்ட்ராக்டர்களுக்கு பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் கட்சி நிதி என்ற பெயரில் டெண்டர் மதிப்பில் 7.5% முதல் 10% வரை லஞ்சப் பணம் பெற்றதாகவும் எஃப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Source link