காலில் செருப்பில்லை; கையில் காசில்லை: மகளின் சிவில் சர்வீஸ் கனவுக்காகப் புடவையுடன் ஓடிய தாய்

Written by: Shubham Kurale

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகாயில் சனிக்கிழமை நடைபெற்ற 3 கிலோமீட்டர் ஓட்டப்பந்தயத்தில், 47 வயதான ரமாபாய் ரன்வீர் காலில் அணிந்திருந்த செருப்பைக் கழற்றிவிட்டு வெறும் காலில் ஓடியபோது, அவர் பதக்கத்திற்காக மட்டும் ஓடவில்லை. தனது இளைய மகளின் ஒரு வார கால அமைதியை உடைக்கவும், மகாராஷ்டிர அரசுப் பணியாளர் தேர்வாணையத் (MPSC) தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற மகளின் கனவை நனவாக்கவுமே அவர் ஓடினார்.

அம்பாஜோகாயில் உள்ள பாரதிய சிக்ஷன் பிரசாரக் சன்ஸ்தாவின் 75-வது ஆண்டு விழா மற்றும் தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ‘அமிர்த ஓட்டம்’ (Amrut Daud) போட்டியில், புடவை கட்டி வெறும் காலில் ஓடிய ரமாபாயின் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து கோலேஷ்வர் கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் தீபக் புலாரி கூறுகையில், 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் ரமாபாய் திடீரெனப் பதிவு செய்து புடவையுடன் ஓடினார். சிறிது தூரம் சென்றதும் காலில் அணிந்திருந்த செருப்புகளைக் கழற்றிவிட்டு வெறும் காலில் ஓடினார். அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில், சுமார் 30 நிமிடங்களில் பந்தய தூரத்தைக் கடந்து முதலிடமும் பிடித்தார். அதேபோல் இளம் வயதினருக்கான பிரிவில் அவரது மற்றொரு மகள் 2-வது இடத்தைப் பிடித்தார் என்றார்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இணையத்தில் வைரலான இந்த ஓட்டத்திற்குப் பின்னால் ஒரு நீண்ட நெடிய போராட்டக் கதை மறைந்துள்ளது. இந்த ஓட்டத்தில் பங்கேற்றது குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழுக்கு ரமாபாய் அளித்த பேட்டியில், எனது இளைய மகள் ஆர்த்தி நன்றாக படிக்கக்கூடியவர். கடந்த 2 வாரங்களாக எம்.பி.எஸ்.சி புத்தகங்கள் வாங்கித் தருமாறு என்னிடம் கேட்டுக்கொண்டிருந்தார். புத்தகங்கள் வாங்கத் தேவையான ரூ.3,200 என்னிடம் இல்லாததால், என்னுடன் பேசுவதை நிறுத்தி எட்டு நாட்களாக மௌனமாக இருந்தார். நான் மிகுந்த மனவேதனையில் இருந்தேன். அப்போதுதான் ஞாயிற்றுக்கிழமை 3 கி.மீ ஓட்டப்பந்தயம் நடப்பது எனக்குத் தெரியவந்தது. அதில் முதலிடம் பிடித்தால் கிடைக்கும் ரூ.3,000 பரிசுத் தொகையைக் கொண்டு மகளுக்குப் புத்தகம் வாங்கிவிடலாம் என்ற எண்ணத்தில் உடனே பதிந்து, முழு மூச்சோடு ஓடினேன் என்றார்.

அவர் ஓடிய ஓட்டத்திற்கு பலனாக முதலிடம் பிடித்துப் பரிசை வென்றார். அதே போட்டியில் அவரது மூத்த மகள் பூஜாவும் இளம் வயதினருக்கான பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்து ரூ.2,000 பரிசை வென்றார். இருவரது பரிசுத் தொகையுமே ஆர்த்தியின் புத்தகத் தேவைக்காக வழங்கப்பட்டது. ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள பொத்ரா கிராமத்தைச் சேர்ந்த ரமாபாயின் வாழ்க்கை, 2012-ல் கணவர் மறைந்த பிறகு முற்றிலும் மாறிப்போனது. 2 மகள்களையும் வளர்க்கும் முழுப் பொறுப்பும் அவர் மீது விழுந்தது.

“எங்களுக்குச் சொந்தமாக நிலமோ, சொத்தோ கிடையாது. அதனால் மற்றவர்களின் வயல்களில் கூலி வேலை செய்துதான் மகள்களின் பள்ளிப் படிப்பை முடித்தேன்” என்கிறார் ரமாபாய்.

தற்போது 22 வயதான மூத்த மகள் பூஜா மகாராஷ்டிர காவல்துறையில் சேரப் பயிற்சி பெற்று வருகிறார்; இளைய மகள் ஆர்த்தி, நாந்தேடில் உள்ள விஸ்வபாரதி கல்லூரியில் பி.எஸ்சி கணினி அறிவியல் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். கூடவே, எம்பிஎஸ்சி தேர்வெழுதி அதிகாரியாகும் கனவோடும் உழைக்கிறார். ஆனாலும் குடும்பத்தின் வறுமை தொடர்கிறது. எனக்கு இங்கு மாதம் ரூ.9,000 சம்பளம் கிடைக்கிறது. ஆனால் ஆர்த்தியின் படிப்பு செலவுக்கு மாதம் சுமார் ரூ.10,000 தேவைப்படுகிறது. அதனால் என் சம்பளம் முழுவதையும் அவளுக்கே அனுப்பிவிடுகிறேன். இரு மகள்களின் படிப்பு மற்றும் பயிற்சியை நிர்வகிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்கிறார் ரமாபாய்.

குடும்பப் பின்னணியை உணர்ந்த மூத்த மகள் பூஜா, தனது பட்டப்படிப்பு ஆசையைக் கைவிட்டுத் தாயின் சுமையைக் குறைக்க முடிவெடுத்தார். அம்பாஜோகாயில் உள்ள தியான்ய்தீப் அகாடமியில் தற்போது பயிற்சி பெற்று வருகிறார். அப்பா இறந்த பிறகு, அம்மா மிகவும் கஷ்டப்பட்டு எங்களை வளர்த்தார். மேல்நிலைப் படிப்பை முடித்ததும் பட்டப்படிப்பு படிக்கப் பணம் இல்லாததால் படிப்பைக் கைவிட்டு, கடந்த ஓராண்டாகக் காவலர் தேர்வுக்கு தயாராகி வருகிறேன். காவல்துறையில் சேர்ந்து என் தாயைப் பெருமைப்படுத்துவதே என் லட்சியம் என்கிறார் பூஜா. இவர்களின் நிலையை அறிந்த அகாடமி உரிமையாளர் தத்தா தாரடே, பூஜாவின் பயிற்சிக் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்து தங்குமிடம் தந்துள்ளார்; அத்துடன் அகாடமியின் சமையலர் வேலையை ரமாபாய்க்குக் கொடுத்துக் குடும்பத்திற்குப் பெரும் ஆதரவாக நின்றுள்ளார்.

ஆர்த்தி அரசு உதவித்தொகை பெறத் தகுதியுடையவராக இருந்தபோதும், தந்தையின் இறப்புச் சான்றிதழ் இல்லாததால் அதைப் பெற முடியாத நிலை நீடிக்கிறது. கிராம பஞ்சாயத்து நீதிமன்றம் மூலம் சான்றிதழைப் பெறச் சொல்வதாகவும், வழக்கறிஞருக்குக் கட்டணம் செலுத்தப் பணமில்லாததால் இந்த நடைமுறை நிலுவையில் உள்ளதாகவும் குடும்பத்தினர் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். ரமாபாயின் இந்த ஓட்டம் இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. எழுத்தாளர் நீல் டிசில்வா X தளத்தில், ரமாபாய்க்கு என் வணக்கம்; பிள்ளைகளுக்காகத் தாயால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு இதுவே சான்று. இவரே உண்மையான சாம்பியன் என்று பதிவிட்டுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தேசிய செய்தித் தொடர்பாளர் டாக்டர் ஷாமா முகமது, மகாராஷ்டிர அரசு முன்வந்து இந்த மகளின் கல்விச் செலவை ஏற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Source link