புதுடில்லி: பிரதமர் மோடி நாளை செப்டம்பர் 8ம் தேதி குஜராத் பயணம் மேற்கொண்டு, ரூ.35,000 கோடி மதிப்பிலான ரயில் மற்றும் சாலைத் திட்டங்களைத் துவங்கி வைக்கிறார்.
குஜராத் மாநிலத்தின் வளர்ச்சிக்காகரூ.35,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ரயில் மற்றும் சாலைத் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், அவற்றுக்கு அடிக்கல் நாட்டுவதற்கும் பிரதமர் மோடி நாளை செப்டம்பர் 8ம் தேதி வதோதராவுக்குச் செல்கிறார். இந்த திட்டங்களில், மேற்கு பிரத்யேக சரக்கு வழித்தடத்தின் மேம்படுத்தல்கள் , புதிய ரயில் பாதைகள் மற்றும் இரட்டிப்புத் திட்டங்கள், அத்துடன் குஜராத்தில் உள்ள பல நெடுஞ்சாலைத் திட்டங்களும் அடங்கும்.
இந்த உள்கட்டமைப்புத் திட்டங்கள், குஜராத் மற்றும் மத்தியப் பிரதேசம் முழுவதும் பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்துவதையும், போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதையும், நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும், மும்பையில் உள்ள நியூ சனந்த் (வடக்கு), நியூ மகர்புரா, நியூ உம்பர்காவ்ன் மற்றும் நியூ ஜே.என்.பி.டி ஆகிய இடங்களிலிருந்து சரக்கு ரயில் சேவைகளை பிரதமர் மோடி கொடியசைத்து துவங்கி வைப்பார்.
ரூ.9,700 கோடிக்கும் அதிகமான செலவில் 329 கி.மீ. தூரத்தை உள்ளடக்கிய மூன்று ரயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்படும். இவற்றில் வதோதரா-ரத்லாம் மூன்றாவது மற்றும் நான்காவது ரயில் பாதைகள் உள்ளிட்டவை அடங்கும். இந்தத் திட்டங்கள் பயணிகள் மற்றும் சரக்கு ஏற்றிச் செல்லும் திறனை அதிகரித்து, போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, குஜராத்திற்கும் மத்தியப் பிரதேசத்திற்கும் இடையிலான ரயில் போக்குவரத்தை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வீட்டுவசதித் திட்டம் மற்றும் கிழக்கு வதோதராவில் உள்ள 11 கிராமங்களுக்கான குடிநீர் விநியோகத் திட்டம் ஆகியவை அடங்கும். வதோதரா மற்றும் டாண்டா ரோடு இடையே ஒரு புதிய ரயில் சேவையும் துவங்கி வைக்கப்படும். இந்தச் சேவையால் வதோதரா, சோட்டா உதேபூர் மற்றும் அலி ராஜ்பூர் மாவட்டங்களைச் சேர்ந்த பயணிகள் பயனடைவார்கள். இந்த நாள் இந்த புதிய ரயில் சேவை மிகுந்த வரவேற்பு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
